மறக்க மனம் கூடுதில்லையே ....


27 மார்ச், 2020

வீடே கலகலத்துக் கிடக்க, அவள் கண்களில் நீர் பெருக்கெடுக்க என்னை உற்று நோக்கினாள். வீட்டின் வெளியே “ மருமகளே மருமகளே வா வா, உன் வலதுகாலை எடுத்து வைத்து வா வா “ என ஒலிபெருக்கி அன்பு செய்து கொண்டிருந்தது. நான் கண்களால் சைகை செய்ய, என் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு வீட்டு வாசலில் இருக்கும் அரிசி நிரப்பிய நாழியை எட்டி மிதித்தாள். நண்பர்கள் கரகோஷம் எழுப்ப வீட்டிற்குள் உருவானது எங்கள் காதலின் பிரவேசம். திடீரென அங்கும் இங்குமாக நிகழ்வுகள் கண்ணில் அலைபாய்ந்தன. ஒரு குரல் மட்டும் காத்திரமாக ஒலித்தது.

“ ஏன்டா என்ன விட்ட. என்னைக்கோ செத்துட்டேன். இப்போ இருக்குறது எல்லாம் கொஞ்சம் சதை தான். இப்படி நடைபிணம் ஆக்கிட்டியே டா “ என்ற குரல்

மறுபடியும் “ இப்படி நடைபிணம் ஆக்கிட்டியே டா “ என்பது மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலிக்க, கண்களை திறந்தேன். அதே குரல். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக என்னை ஆட்டுவிக்கும் குரல். அவளின் குரல். வழக்கம் போல கேட்கும் இந்த வசனமும், அவள் குரலும் இரண்டு வருடங்களாக எனக்கு சுப்ரபாதம் போல ஆகிவிட்டன. அந்த குரலில் விடியும் பொழுதெல்லாம் ரணம்.

நான் மீளா துயரில் இருந்த பொழுது என்னை தூண்டில் இட்டு தூக்கி எடுத்தவள். தோல்விகளினால் கண்களில் நீர் பெருகுகையில் தன் இமைகளால் என் கண்களை வருடி ஆறுதல் சொன்னவள். இருளில் கிடந்த எனக்கு ஒளியை வீசிய அவள், பெயரில் மட்டும் அல்ல நிஜத்திலும் நிலா தான். நிலா என் முன்னாள் காதலி, நிஜத்தில் சொல்ல போனால் இன்றும் என் காதலி தான். காதலர்கள் தோற்பது உண்டு, ஆனால் காதல் தோற்பது இல்லை எனும் வகையறாவை சேர்ந்த உடைந்து போன காதல் கதை எங்களுடையது. இப்போதெல்லாம் எனக்கு நானே நடக்காத ஒன்றை என் மனதில் நடப்பது போல பதிவு செய்வது பழக்கம் ஆகிவிட்டது. அது என் கனவுகளில் பிரதிபலிக்கின்றது. படித்த படிப்பு அப்படி. மருத்துவ துறையில் படிக்க எத்தனையோ துறைகள் இருக்க, நான் தேர்வு செய்தது மனநல பிரிவு. மனிதர்களில் முக்கால்வாசி பேருக்கு இருக்கும் மெலிதான மன அழுத்தம் என்னையும் ஆட்கொண்டிருந்ததை நான் அறிவேன். நோயினை ஏந்தித் திரியும் மருத்துவர் என்று என்னை சொல்வதில் என்ன ஒரு முரண் பாருங்கள்...

கோதையின் கோவை :

நிலாவை காதலித்து சுற்றித் திரிந்த இதே கோவையில் இப்பொழுது மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டு இருக்கிறேன். பப்ஜி விளையாடி இறந்து போன கல்லூரி மாணவனை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுத வந்த என்னை, கொரோனா ஊரடங்கை வைத்து சிறை பிடித்தது கோவை. இதே கோவையில் தான் எங்கோ ஒரு மூலையில் என் நிலா எவனோடோ வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். முன்பெல்லாம் அவள் இருக்கும் கோவையில் வந்து இறங்கும் போதெல்லாம் சிலிர்க்கும் என் தேகம், இப்போது சொல்ல முடியா எண்ணத் தீயில் எரிகின்றது.

எனது அலைபேசியில் என் நண்பனின் அழைப்பு. கல்லூரி கால நட்பு.

“ மச்சான், ரெடியா இருடா. உன் ரூம்க்கு தான் வர்றேன். ஒரு டீயை போடுவோம் “ என்றான்.

சொன்ன பத்து நிமிடத்தில் வந்தும் சேர்ந்தான். அடுத்த ஐந்து நிமிடத்தில் சூடான இஞ்சி டீயோடு ஆரம்பித்தது எங்கள் உரையாடல். நானே துவங்கினேன்...

“ மச்சி உன்னை கெஞ்சி கேக்குறேன். எப்படியாச்சும் எனக்கு சென்னை போக எதுனா ஏற்பாடு பண்ணி கொடு டா “

“ டேய் நியூஸ் பாத்தல்ல, கோயம்பத்தூர் ரெட் சோன். வாய்ப்பே இல்லைடா. இனி இந்த லாக்டவுன் முடியற வரைக்கும். உனக்கு இங்க தாண்டி “

“ என்னால இங்க இருக்க முடில டா. ரிசர்ச் வேல எல்லாம் கெடப்புல கெடக்குடா. ப்ளீஸ் மச்சான். “

“ இங்க இருந்து ரிசர்ச் வேலைய முடிடா. உனக்கு தனிமை தானே வேணும் “

“ அது இல்லைடா . உனக்கு புரியாது விடு.”

“ ஏய் நீ சொல்றத பாத்தா, இன்னும் நிலாவ நெனைச்சிட்டு இருக்கியா ?

அதனால தான் இங்க இருக்க முடியாதுன்னு சொல்றியா ? “

நான் கவனத்தை வேறு பக்கம் திருப்பி டீயை பருகிக் கொண்டிருக்க

“ அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுதுடா. பிராக்டிகலா யோசி மச்சான். அதுவும் யூ ஆர் ய சைக்காட்ரிஸ்ட். சைக்கோ மாதிரி பண்ணாதடா. ஜஸ்ட் சக் ஹர் மச்சான்.”

“ டேய் சொல்றது ஈசி டா. ஸபரிங் இஸ் வெரி பர்சனல் மச்சான் “

“ இந்த அர்ஜுன் ரெட்டி வசன கூந்தலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. பட் டோன்ட் டேக் டூ மச் இண்டூ யுவர் ஹெட் டா. உன்னை பத்தி எங்க ஹாஸ்பிடல்ல பேசிருக்கேன். ஜஸ்ட் மீட் அவர் ஹெட் டா. லாக்டவுன் முடியுற வர உன் சேவை எங்களுக்கு தேவை. உனக்கும் கொஞ்சம் பெட்டெரா இருக்கும் “

“ சரி, என்னமோ பண்ணு. “

28 மார்ச், 2020 @ Mind Hub Hospital

நலம்தானா ? :

“ டாக்டர் இதுனால பெருசா எதுவும் பிரச்சனை இல்லையே ?

“ இதே கேள்வியை எத்தனை தடவ டா கேப்பீங்க ? “ எனும் என் மைன்ட் வாய்ஸ் சத்தத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “ வெளியே எல்லாருக்கும் நோய் இருக்குறதால, சின்னதா தூசி பட்டு தும்மல் வந்தா கூட நமக்கு கொரோனா வந்துடிச்சோ ன்னு பயம் வந்து, அது உங்களுக்கு உடம்புலயும் மனசுலயும் பிரதிபலிக்குது. ஓகே நான் டேபிலெட் எழுதிருக்கேன். அத சாப்பிட்டு நல்லா தூங்குங்க “ என லேசாக சிரித்து வைத்தேன்.

இப்படியாக சின்ன சின்ன பயங்களுக்கு மன நல மருத்துவமனைக்கு வரும் மக்களை பார்க்கையில் பாவமாக இருக்கிறது. மனதளவில் இவ்வளவு பலவீனமாக இருப்பவர்கள் எவ்வாறான ஒரு இளைய தலைமுறையை வளர்த்து எடுக்க போகிறார்கள் என்பது ஒரு கவலையாக உருவெடுத்து விட்டது. இப்படி நலமாக உள்ளவர்கள் தான் அதிகமாக மன நல ஆலோசனைக்கு வருகிறார்கள். ஆனால் மனங்களில் குரூரம் குடி கொண்டு ஆணவ கொலை செய்வது எல்லாம் சைக்கோதனம் என்பது மக்களுக்கு புரிவதில்லை. அதுவும் ஒரு வகையான மனநோய் தான். அவர்கள் சுதந்திரமாக வெளியே உலவிக் கொண்டிருக்க நாங்கள் இங்கே இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு பேன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியாக டிவோர்சால் மனம் உடைந்தவர்கள், காதலி அல்லது காதலனால் கழற்றி விடப்பட்டவர்கள் என வித விதமான மனிதர்களை சந்திக்கையில் அவர்களிடம் எல்லாம் ஏதோ ஒரு சாயலில் அவள் ஒளிந்து கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தாள். அவளிடமிருந்து ஓடுவதாக நினைத்துகொண்டு அவளுக்குள்ளேயே ஓடிக் கொண்டு இருக்கிறேன், கடிகாரத்தில் ஓடும் முள்ளை போல.

30 மார்ச் 2020

“ எவ்வளவு நேரமா உனக்கு போன் பண்றேன்,என்ன பண்ணிட்டு இருக்கலே ? ” பணிகளுக்கு இடையில், மனதை குடையும் சில சலனங்களுக்கு மத்தியில் அம்மாவின் அழைப்பு மனதிற்கு இதம் தந்தது.

“ இன்னைக்கு ஒரு முக்கியமான நாளு.கொஞ்சம் மனசு சரி இல்லம்மா, அது தான் அட்டென்ட் பண்ணல “

“ என்ன மறுபடியும் உன் பழைய காதல் கதையா ? இன்னும் எத்தனை நாளுக்கு அவளை நெனைச்சு நீ உன் வாழ்க்கைய அழிக்க போற மக்ளே..?

“ நம் ஒரு வார்த்தைக்குள் பொதிந்து கிடக்கும் பல கோடி சோக கீற்றுகள் தாயின் கண்களுக்கு மட்டும் தெளிவாக தெரிவதன் ரகசியம் தான் என்னவோ என நினைத்து பதிலுரைத்தேன்.

“ எம்மா, நீ ஒரு புள்ளைய உசிருக்கு உசிரா காதலிச்சு, விதியால சேர முடியாம போய், அவ இன்னொருத்தன கட்டிக்கிட்டு போனா உனக்கு என் வலி தெரியும் “

“ எலேய், நான் ஏம்ல நடுராத்திரி சுடுகாட்டுக்கு போக போறேன்...மக்ளே இது உன்ன அழிச்சிரும், அவ வேணாம்டே..இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகாம இருந்தாலாச்சும் நம்ம போய் பேசலாம்....இதை எல்லாம் விட்டுட்டு பொழப்ப பாரு மக்ளே, நான் உனக்கு சாயங்காலம் கூப்புட்றேன் ” என அம்மா அழைப்பை துண்டித்த பிறகும் “ இது உன்ன அழிச்சிரும் “ என அம்மா சொன்னது மனதில் பதிந்துவிட்டது.

பாசமிகு பாண்டா :

அழிந்து கொண்டு தான் இருக்கிறேன். எனக்குள் அழிந்து கொண்டிருக்கும் அவளது நினைவுகளோடு சேர்ந்து. அவளை பாண்டா குட்டி என்று தான் அழைப்பேன். அவளை மறக்க நினைத்து சென்னையின் வீதிகளில் செல்லும் போதெல்லாம் Food Panda விளம்பரங்கள் என் கண்ணை ஈர்த்து பெருமூச்சை பரிசாக பெற்று செல்கின்றன. எப்போது அழைத்தாலும் “ சாப்டுட்டு இருக்கேன் பேபி சொல்லு “ எனும் அவளது அலைபேசி அழைப்புகள் இல்லாமல் போனதால் ஆசையாய் வாங்கிய கைபேசியும் இப்போது கசக்கிறது. திருமணம் செய்ய சொல்லி எத்தனையோ முறை வற்புறுத்தியும் நான் மறுத்து விட்டேன். இனி அப்படி ஒரு பாண்டா குட்டியை எங்கு சென்று தேட....இப்படியே மீதி பாதியை கழிப்பதே என் எண்ணம்.

“ சிஸ்டர் அடுத்த பேசியன்ட்ட கூப்டுங்க.. அவங்க கேஸ் ஷீட்ட குடுங்களேன். “ என நான் சொல்ல சிஸ்டர் நீட்டிய அந்த ஷீட்டை மறுபடியும் ஒரு முறை கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன்

Mrs.Nila.R என அதில் இருந்த பெயர் கண்டு சற்று தடுமாறி போனேன். அது ஒரு வேளை வேறு நிலவாக இருக்கும் என்றாலும், அந்த இனிஷியல், என்னுடைய நிலா ராகவனை தான் குறித்தது. வயதும் அவள் வயதினை ஒத்ததாக இருந்தது.

“ சிஸ்டர் இந்த பேசியன்ட் எங்க இருக்காங்க ? “

“ வெளியே வெயிட் பண்ண சொல்லிருக்கேன். உள்ள வர சொல்லவா? ” என சிஸ்டர் கூறியதை கேட்டு மெல்ல கதவை திறந்து பார்த்தேன். கதவின் இடுக்கில் தெரிந்த அந்த நெற்றியை மறைக்கும் இரு குழல் நெளிவுகள், வந்திருப்பது அவள் தான் என உரக்கச் சொல்லியது. இன்னும் அவள் தன் அழகியலை தொலைக்கவில்லை. இப்போது இன்னும் அழகு மெருகேறி இருந்தாள்.என் பார்வை விழுந்த திசையில் தாலி வந்து குறுக்கே ஆடி, என்னை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. இனி யாரை பார்க்க முடியாது என்று கண்கள் காய்ந்து கிடந்தனவோ, அவை கன்றை கண்டு பால் சுரக்கும் தாயின் மடியாய் கண்ணீரை கன்னம் தொட வைத்தது. ஆனால் இங்கு இவள் என்ன செய்கிறாள் ? என்ற கேள்விக்கு, அவளுடைய உடல் மொழி, அவளுக்குள் நடக்கும் மன போராட்டங்களை எனக்கு பதிலாய் சொல்லியது.

ராதை கண்ணனோடு ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, ஆயர்பாடியில் இன்னொருவனை மணம்புரிந்து செல்வாள். அந்த திருமணத்தை நேரில் பார்க்கும் கொடூர தண்டனையை பரமாத்மா மனிதனாக பிறந்து தனக்கு தானே கொடுத்துக் கொள்வார். அப்படி ஒரு நிலையை தான் எனக்கு ஆண்டவன் இன்று அளித்து இருக்கிறான். காதலியை பார்க்க கூடாத ஒரு இடத்தில் பார்க்கிறேன். அவளின் கண்களை சுற்றி இருக்கும் கருவட்டம், பல நாட்கள் அவள் தூக்கத்தை தொலைத்ததை காட்டுகிறது.

“ சிஸ்டர் அவங்கள வர சொல்லுங்க “ என சொல்லிக் கொண்டு முள் இருக்கையில் இருந்தது போல இதுகாறும் அனுபவித்திராத நெருடலில் நெளிந்து கொண்டு இருந்தேன்.

அவள் கதவை திறந்து என்னை கண்டு நின்றுவிட்டாள். அவளது கண்கள் சட்டென விரிந்தன. கருவட்டத்தின் நடுவே விரிந்த அவள் கண்கள், வட்டமான கரைகள் கொண்ட பரிசல்கள் அசைந்தாடும் பெருநதி போல உயிர்ப்பு அடைந்தது. ஓரிரு நொடிகளில் சுதாகரித்து கொண்டு, திரும்பி செல்லவும் முடியாது அவளுடன் வந்திருந்த பெண்ணின் கரம் பற்றி நின்றாள், இந்த காரிகை.

வேறு வழி இல்லை என தெரிந்த பிறகு என் முன்னே வந்திருந்த அவளின் மீது கவனத்தை குவிக்காது, அவளது கேஸ் ஷீட்டை வாசித்துக் கொண்டு இருந்தேன். சற்று நேரம் கழித்து

“ சொல்லுங்க Mrs. Nila Ragavan , என்ன பிரச்சனை ? “ என அவள் கண்களை நேரிட்டு சந்திக்க முடியாமல் பார்த்தேன்.

“ I am Mrs. Nila Ilangovan “ என்று மட்டும் சொன்னாள்.

அது ஒரு வகையில் உன்னை அடைய முடியவில்லை என்றாலும் உன் பெயரை அடைந்தேன் என தம்பட்டம் அடிக்கும் ஒரு சராசரி பெண்ணின் ஏக்கத்தோடு கூடிய திமிராகவே தெரிந்தது.

என் மேசையின் மேல் Dr.Ilangovan என்ற பெயர் பலகை தன் பல்லை இளித்துக் கொண்டு இருந்தது.

“ குந்தாணிக்கு திமிரு மட்டும் மாறவே இல்லை “ என மனதில் நினைத்து கொண்டு, பக்கத்தில் அவளோடு வந்திருக்கும் பெண்ணை பார்த்தேன், அவள் என் பெயர் பலகையை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ சொல்லுங்க நிலா, உங்களுக்கு என்ன பிரச்சனை “ என்றதும், அவள் தன் இதழ்களை உயிரே போனாலும் திறக்க கூடாதென இருந்தாள். அது எனக்கு அவளிடம் முதல் முத்தம் கேட்ட பொழுதினை ஞாபகப்படுத்தியது. மானம் கெட்ட மனதிற்கு நேரம் காலம் தெரியவில்லை.

பக்கத்தில் இருக்கும் பெண், அவளின் மௌனத்தை பார்த்துக் கொண்டு “ ஒரு மாசமா ரொம்ப டிப்ரஸ்டா இருக்கா டாக்டர். சரியான தூக்கம் இல்லை. யார்ட்டையும் சரியா பேசுறது இல்ல. சாதாரண விசயத்துக்கும் எரிஞ்சு விழுறா “ என அந்த பெண் அடுக்கிக் கொண்டே போக, இது எல்லாம் அவள் மாதவிடாய் நாட்களில் அவளிடம் தென்படும் மாற்றங்கள் என்றாலும், அதன் வீரியம் அதிகமாக இருந்தது. அவளின் மாதவிடாய் நாட்களில் உடனிருந்த என்னை போன்றதோர் துணை அவளுக்கு இல்லாமல் போனதோ ? என் பாண்டா குட்டியை இப்படி வாட விட்டது எது ? என எனக்குள்ளே பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவள் என்னை பார்த்தாள், அப்படியே அவள் உடன் வந்திருந்தவளை பார்த்தாள். அவள் மச்சங்கள் முதல் அச்சங்கள் வரை அறிந்த எனக்கு அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என புரியாமல் போய் இருந்தால் உண்மையிலேயே நான் முட்டாளாக இருக்க வேண்டும். ஆண்டவன் எனக்கு கொஞ்சம் அறிவை கொடுத்திருந்தான்.

உடைந்த மௌனம் :

பேசியன்டுடன் தனியே பேச வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை வெளியே அனுப்பினேன். மறுபடியும் ஒரு நீண்ட மௌனம் அந்த அறையை சூழ்ந்தது. அவள் அந்த மௌனத்தை உடைத்தாள்.

“ நீ எப்படி...சாரி நீங்க எப்படி இங்க ? “

“ நான் வரல, நீ தான் ...சாரி நீங்க தான் வந்து இருக்கீங்க “

“ நான் எதுவும் பேச விரும்பல, எதாச்சும் ஸ்லீப்பிங் டேபிலட் எழுதி தாங்க. நான் கெளம்புறேன். “

“ இங்க நான் தான் டாக்டர்ன்னு நெனைக்குறேன். எனக்கு தெரிஞ்ச வரை “

அவள் மறுபடியும் அமைதியாய் இருந்தாள்.

“ அப்பாவை மிஸ் பண்றியா ? “ என ஆரம்பித்தேன். அந்த கேள்வி அவள் இறுக்கங்களை உடைக்கும் என அறிவேன்.

தலை குனிந்தவள், அடுத்த ஓரிரு நொடிகளில் உடைந்து அழ துவங்கினாள். அவளின் கருவட்டம் ஏறிய கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்ததை கண்டதும், என் மனம் கதறி அழ முயன்றும் முடியாது போன ஊமை குழந்தையை போல, செய்வதறியாது கண்களில் வழியும் கண்ணீரை மட்டும் துடைத்துக் கொண்டிருந்தேன். “ உன் கண்ணில் நீர் வழிந்தால், கண்ணம்மா என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி “ என்ற வரிகளை எத்தனையோ முறை சந்தேகித்தது நான் செய்த பாவங்களில் ஒன்று. கண்ணம்மாக்களின் கண் நிரம்பக் கண்ட எந்த பாரதியும் நெஞ்சில் உதிரம் கொட்டுவான்.

போன முறை அவள் அப்பா தன் கைகளில் சாய்ந்து உயிர் விட்டதை சொல்லி கதறி அழுகையில், அவள் கைகளை இறுக்க பற்றி கொண்டு நானும் அழுதது ஞாபகம் வந்தது. இன்று என் கண்மணி என் கண் முன்னே கதறி அழுகிறாள், அவளை தேற்ற அவள் கைகளை கூட தொட முடியாத பாவியாய் போனேன். அழுது முடிக்கட்டும் என அமைதியாய் இருந்தேன்.

“ அப்பா இருந்துருக்கலாம். அவர் ஏன் என்னை விட்டு இவ்வளவு சீக்கிரமா போனாருன்னு தெரியல. எல்லாரும் என்னை விட்டு போ போ ன்னு விரட்டுனாங்க. இப்ப நானே அவங்க எல்லாரையும் விட்டுட்டு வந்துட்டேன்.ஆனா தெரியல....” என அவள் இழுத்து இழுத்து பேசியதில் இருக்கும் “ எல்லாரும் “ என்பது என்னை மட்டுமே குறிக்கும் என்பது அறிவேன்.

“ போன மாசம் வரை என்னோட எல்லா சோகத்துக்கும், தனிமைக்கும் மருந்து இருந்துச்சு. நாலு மாசம் ப்ரெக்னன்ட்டா இருந்தேன். எப்படின்னே தெரியல. எங்க மிஸ் பண்ணேன்னும் தெரியல. குழந்த அபார்ட் ஆகிடிச்சு. பாப்பா எனக்குள்ள இருக்குறப்ப, நான் தனியா இருக்குற மாதிரியே உணரல. அந்த சின்ன விரல் எனக்குள்ள தொடுறப்ப எல்லாம் அப்டியே சிலிர்க்கும்...” எனச் சொல்லி முடிக்கவும் மறுபடியும் அழுதாள்..

அவளுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். என்னோடு ஷாப்பிங் செல்லும் போதெல்லாம், கடைகளில் இருக்கும் பொம்மைகளை பார்த்து ரசிக்கும் போது, உயிருள்ள பொம்மை போல மிளிர்வாள். “ என் பாப்பாவுக்கு இதை எல்லாம் வாங்கி குடுப்பேன் “ என அவள் சொல்வது கண் முன்னே வந்து சென்றது. அவளுக்கா இந்த நிலை ? என்ன சொல்லி தேற்றுவது என தெரியவில்லை. அவள் முழுவதுமாக உடைந்து அழுவது தான் அவளுக்கான மருந்து என்று அறிவேன். அழுது முடிக்கட்டும் என அமைதி காத்தேன்.

ஏன் என்னை பிரிந்தாய் ? :

“ எனக்கு தெரியும் நீ என் மேல கோவமா இருப்பன்னு.நீ நல்லா இருக்கணும்னு சொல்லி தாண்டா நான் தள்ளி போனேன். உன்ன ஏமாத்தணும்னு நான் கனவுல கூட நெனைக்கலடா “ எனக் குமுறி அழுதாள்

என்னையும் அறியாது வார்த்தைகள் வெளிப்பட்டன.

“ பாண்டா எனக்கு புரியுது . சீ வீ மேட் எ சேக்ரிபேஸ். இப்படி உக்காந்து அதுக்கு ரேக்ரெட் பண்ணி அழுது அதை கொச்சப்படுத்தாத, உனக்கு நடந்த இந்த சோகத்துக்கு நான் என்ன சொன்னாலும், என்ன ஆறுதல் குடுத்தாலும் ஈடாகாது. அபார்சன் இந்த காலத்துல நெறைய நடக்குது. ஆனா அது உனக்கு பெரிய இழப்பு. ஏற்கனவே நீ நொந்து போன உன் கடந்த காலத்துல இருந்து வெளிய வர்றதுக்கு, பாப்பாவை ஒரு கிப்டா நெனைச்சிருக்க, அது இல்லங்கறத உன் மனசுக்கு புரிய வை. எப்படி நீ நான் ஒவ்வொரு வாட்டி தோக்குறப்பவும் “ இப்ப இல்லாட்டி இனி இத விட செமையா நடக்க போவுது “ ன்னு சொல்லுவல்ல அது மாறி தான். நீயே இப்படி உடைஞ்சு போகலாமா ? “ என ஒரு இடைவெளி விட்டேன்.

அவளின் முகத்தில் வெளிச்சத்திற்கான ரேகைகள் துளிர்விட்டன.

“ இலக்கணம் சில நேரம் பிழை ஆகலாம், எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் “ ன்னு ஒரு பாட்டு உண்டுல்ல. அது போல தான் இந்த வாழ்க்கை. நடந்து முடிஞ்ச தவறுகளையும், பிரிஞ்சு போன உறவுகளையும் நெனைச்சு தேங்குன குட்டையாட்டம் நிக்காம, நதி போல ஓடிட்டே இரு பாண்டா. எனக்கு அப்படி உன்னை பாக்கதா புடிக்கும் “ என எனக்கு தோன்றியதை எல்லாம் உளறிக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் இது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் ஒரு வகை தெரபி போல தெரிந்தது.

“ இழப்புகளை ஏத்துக்க மனசுக்கு சொல்லி குடுத்தாலே, அது திடம் ஆகிடும். இந்த மன அழுத்தம் எல்லாம் பக்கத்துலையே வராது பாண்டா “ என சொன்ன உடன் “ உனக்கு எத்தன வாட்டி சொல்றது என்னை பாண்டான்னு கூப்புடாத, அம்முன்னு கூப்டுன்னு” என்று சொல்லிவிட்டு சட்டென நாக்கை கடித்தாள்.

அவள் என்னிடம் மறுஅறிமுகம் ஆன இந்த முக்கால் மணி நேரத்தில் முதல் முறையாக சிரிக்கிறாள்.

அவளுக்கான மருந்தை அவளுக்குள்ளே வைத்துக்கொண்டு மருத்துவமனை நாடி வந்த பேதை இவள். அவள் சிரிப்பு அவளுக்கு மட்டும் அல்ல, என் மன அழுத்தத்துக்கும் மருந்து.

மழை நின்ற பின்னும் தூறல் :

“ எப்படி இருக்காரு உங்க புருஷரு ? “ என்று நக்கலாக கேட்டேன்.

“ அவருக்கென்ன நல்லா இருக்காரே “ என்றாள்

இப்படியாக உரையாடல் துவங்கியது

“ அவர நான் பாக்க நீ எனக்கு வாய்ப்பே குடுக்கலையே, நாங்கெல்லாம் பாக்க கூடாதா ? “

“ ஆமா பாக்க கூடாது தான்...”

“ ஏன் பாக்க கூடாது, அவர் என்ன ஆம்பள ஐஸ்வர்யா ராயா ? “

“ அப்டின்னே வச்சுக்குங்களேன், ஆனா என் அளவுக்கு அழகில்ல. “

“ நீயே சுமாரா தான் இருப்ப. உன் அளவுக்கு கூட இல்லாட்டி, எனக்கு புரியுது. நீ ஏன் உன் புருசன என் பார்வை பட கூடாதுன்னு முந்தில ஒளிச்சு வைக்குறன்னு..அங்க பாரு, இன்னும் நல்லா ஒளிச்சு வை. லைட்டா தெரியுறாரு பாரு. “

“ இப்படி கலாய்ச்சா நான் கெளம்பி போக வேண்டியது வரும் “

“ ஆர் யு ஒகே “

“ யா ஐ யம் “

“ எல்லாம் மாறும், நான் கடவுள வேண்டிக்குறேன். அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும். நான் கும்புட்ற முருகன் உன்ன கை விட மாட்டான். “

அதை கேட்டு சின்னதாக புன்னகைத்தாள்

“ இனிமே கோயம்புத்தூர் தானா ? “

“ இல்ல இல்ல லாக்டவுன்ல இங்க மாட்டிகிட்டேன் “

“ நீ எப்போ கல்யாணம் பண்ண போற “

“ என்ன பண்ண, உனக்கு ஒரு தங்கச்சி இருந்துருந்தா, அவளை கல்யாணம் பண்ணிருக்கலாம். அதுக்கும் குடுத்துவப்பனை இல்ல “

“ உங்க மனசுக்கு புடிச்ச ஒரு பொண்ண பாத்து, என் தங்கச்சியா நெனைச்சு கட்டிக்குங்க “

நான் லேசாக புன்னகைத்தேன். இந்த உரையாடலின் போது கையில் கிடைத்த தேவதையை தொலைத்து விட்டோமே என்ற ஏக்கம் என்னை பிடுங்கி தின்ன, அவளுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்தேன்.

கிளம்ப நேரம் ஆகிறது என்றாள். மறுமுறையும் அந்த ரணமான பிரிவு எங்களை ஆட்கொண்டது. இந்த நொடிகள் இப்படியே தொடராதா ?

பைபிளின் வெளி அதிகாரம் போல இந்த பூமி இக்கணமே அழிந்து போய்விடாதா ? மறுமுறை பிறப்பு எடுத்தேனும் அவளிடம் வந்து சேர இயலாதா ? என எனக்குள் குமுறிக் கொண்டிருந்தேன்.

அவள் எழுந்தாள்

கதவின் அருகே சென்ற அவளை அழைத்தேன்.

பாண்டா ....

என்ன என்பது போல கண் அசைத்தாள்

“ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “ என்றேன்

சிரித்தாள்

“ போய் முதல்ல ஷேவ் பண்ணுடா “ எனச் சொல்லி கதவை மூடிவிட்டாள்.

அவள் சென்று நிமிடங்கள் கடந்த பிறகும், அவள் உட்கார்ந்திருந்த நாற்காலியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ டாக்டர் பேசியன்ட்ட வர சொல்லவா ? ” என சிஸ்டர் கேட்ட போது தான் நினைவு மீண்டது.

“ இன்று போதும் “ என்று சொல்லிவிட்டு வீடு சென்றேன்

குளியலறையில் ஷவரின் மடியினில் குழந்தையாய் சுருண்டு ஓவென்று அழுதேன். அவளுக்காக அழுதேனா இல்லை, அவள் தொலைத்த அந்த பூமிக்கு வராத உயிருக்காக அழுதேனா என தெரியவில்லை.

இப்போதைக்கு எனக்கு அழ வேண்டும்......

வாஞ்சையுடன்

வாட்சப் தமிழா