அழகான ராட்சசியே

அழகான ராட்சசியே

நாள்: இன்று - 24.12.2030

வீட்டுக்கு வீடு வாசப்படி:


" அடியே இங்க வாடி , புள்ளையும் அப்பனை மாதிரியே இருக்கா, நம்ம ஒண்ணு சொன்னா அதுக்கு தலை கீழ தான் செய்ஞ்சு வைப்பா " என்ற குரல் அமைதியான வீட்டிற்குள் இருந்த ஒரு கலவர பகுதியின் வழியே என் காதுகளை அடைந்தது.
எங்கள் வீட்டு சமையலறை தான் அது.
பழக்கப்பட்ட குரல் தான். தனிமையின் விளிம்பில் இருந்து கொண்டு, மீளாத பள்ளத்தாக்கில் விழ இருந்த என்னை இழுத்து , இந்த சிறைக்குள்ளே வைத்தது அந்த குரல் தான். இல்லறம் எனும் மீளா சிறை அது. ஆனால் இந்த சிறைவாசம் சுகமே. எதிர் இருந்த சுவற்றின் மேலே பார்த்தேன் எனது திருமணத்தின் போது நான் தாலி கட்ட புகைப்படக்காரன் தனது கேமராவிற்கு கொடுத்த விரல் அழுத்தம் அழகாக பதிந்துள்ளது ஓர் புகைப்படமாக.
சற்று முன்னர் கேட்ட குரலுக்கு சொந்தக்காரியின் முகமெல்லாம் வெட்கம்.
தமிழினி என் இல்லத்தரசி.
"மிருணா, அம்மா கூப்பிடுறா பாரு ...என்னன்னு கேளு" என்று துணை குரல் எழுப்பினேன்.
baby
" என்னம்மா வேணும் உனக்கு?" என்று பச்சைத்தமிழை குழைத்து தன் பச்சிளம் பாவனையோடு சேர்த்து கேட்டுக் கொண்டு, கையில் தன்னுடைய பாண்டா பொம்மையையும் இழுத்துக் கொண்டே வந்த என் மகளை பார்க்கையில் அள்ளி அணைத்து அன்பு முத்தங்களிட ஆவி துடித்துக் கொண்டிருந்தது.
குழந்தைகள் பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து கடவுளாகிறார்கள்.
" உனக்கு இந்த ரிமோட்ட யூஸ் பண்ணி ஸ்டவ்வ ஆஃப் பண்ண சொல்லிட்டு போனேன்லடி, அங்க உக்காந்து என்னடி பண்ண ? இப்ப பாரு பால் எல்லாம் கொட்டிடுச்சு. இனி பூஸ்ட் வேணும், ஹார்லிக்ஸ் வேணும்னு கிச்சன் பக்கம் வா
உன் முட்டகண்ண நோண்டி எடுக்குறேன் பாரு.." என ஆஃப் ஆஹாத எப் எம் மில் ஓடிய அனிருத் பாடலாய் அலறிக் கொண்டிருந்தாள் தமிழினி.
" நான் என் பாண்டாக்கு தலை சீவிவிட்டுட்டு இருந்தேன் " என அழகாக சிணுங்கிக் கொண்டு என்னை நோக்கி வந்து மடியில் உட்கார்ந்து கொண்டாள் என் மகள்.


" அப்பா உன்ட்ட ஒண்ணு கேப்பேன் சொல்லுவியா?" என்ற என் மகளின் குரலிலும் என் மனைவியின் சாயல்
"கேளுடி அம்மு , நீ கேட்டு நான் என்னைக்கு பதில் சொல்லாம இருந்தேன்" என்றேன்.
அவளுக்கு தமிழ் மொழி நாக்குக்கு பழக்கப்பட்ட காலம் துவங்கி என்னிடம் கோடிக் கணக்கில் கேள்விகள் கேட்டிருப்பாள்.
" ஏம்பா நிலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கு ? "
"ஏன் நம்ம டாமி நம்மள மாதிரி பேச மாட்டிங்குது. அதோட டாடி மம்மி அதுக்கு சொல்லி கொடுக்கலயா ? "
" ஏன்ப்பா நைட் ஆனா வெளியே கருப்பா இருக்கு ? "
என பல கேள்விகள்.
" என்னை அம்முன்னு கூப்பிட்டா ஏன்ப்பா அம்மா உன்னை எரிக்குற மாதிரி பாக்குது ? "
" எதுக்கு தினமும் நைட் ஆனா கண்ணே கலைமானே
பாட்டு கேட்டு சேட் ஆகுற ? "
என்ற பதில் சொல்ல முடியாத ஏடாகூட கேள்விகளும் அதில் அடக்கம்.


கரோனாவும் நானும்:

" இப்படி இம்சை பண்ற அம்மாவை எங்க இருந்துப்பா புடிச்சுட்டு வந்த ? " என்ற என் மகளின் கேள்வியை கேட்டதும் குபீர் என்று சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டிருக்கும் போதே
" ஆமாடி அப்பனுக்கும், புள்ளைக்கும் நான் இம்ச தான். இரு சமைச்சிட்டு வந்து உனக்கு இருக்குடி கச்சேரி " என்ற சத்தத்தை கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு பதில் சொல்ல துவங்கினேன். பத்து வருடங்களுக்கு பின்னால் நினைவுகளை நகர்த்தினேன்.
" கொரோனா ன்னு ஒரு வைரஸ்னால ஒரு நாள் உங்க அம்மா என் ஸ்டேடசுக்கு ரிப்ளை பண்ணாடா, அங்க தான் புடிச்சேன் இவள " என்று கதையை ஆரம்பித்தேன்.


office

22.03.2020 - Channel Office

" ம்மா இதோட பத்து தடவ கூப்பிடுட்டம்மா. நான் வேலையா இருக்கேன். இங்க ஆபிஸ்ல விட்டா வந்து சேர்றேன். இப்போ போனை வைம்மா " என்று கத்திவிட்டு திரும்பிப் பாத்தேன்.
" என்ன ஜி ...கோவப்படாதீங்க. ஓயாம நம்ம ஆளுங்க போடுற பிரேக்கிங் நியூச பாத்தே பாதி வீட்டுல இருக்குறவங்க டென்சன் ஆவாங்க. இந்த கொரோனா சனியன் வேற காவு வாங்கிட்டே இருக்குது. நாளைக்கு பஸ், ட்ரெயின்னு எதுவும் ஓடாது. சீக்கிரம் வூடு போய் சேர்ந்துரணும் ஜி " என்றார் எங்கள் ஸ்டுடியோவின் எடிட்டர் அண்ணா.
" சரி , கோயம்பேடு மார்கெட் எந்த சேப்டியும் இல்லாம இயங்கிட்டு இருக்காமா, நான் போய் கவர் பண்ணி நியூஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்துடறேன் " என கிளம்பினேன்.


"வெயிட் பண்ணுங்க இந்த வீடியோ முடிஞ்சதும் போங்க. சேஃபா போயிட்டு வாங்க ஜி. எவனாவது தும்மி வைச்சு கொரோனா கிரானா வந்துர போகுது " என மிரட்டினார் எடிட்டர் அண்ணா.
சரி, என எடிட் செக் செய்ய அவர் அருகில் கைகுட்டையை முகத்தில் கட்டிக் கொண்டு இருந்தேன்.
" ஏன் ஜி ஒரு வேளை உங்களுக்கு கொரோனா வந்தா, நேர கோயம்புத்தூர் போய் இருமிட்டு வந்துருவீங்கல்ல. சேர்ந்து வாழத் தான் முடியல சேர்ந்து சாவோம்னு உங்க முன்னாளையும் சேர்த்து சாவடிச்சிருவீங்க கரெக்டா " என்ற கேள்வியை கேட்டு பொய்யாக சிரித்து வைத்தேன்.


failure
வீடியோவை செக் செய்து அவுட் வந்துக் கொண்டிருக்கும் போது
அவளை முதன்முதலில் சந்தித்தது துவங்கி, ஒன்றாக கோவை மாநகரை வட்டமிட்டது, காதல் பரிமாறியது என அவுட் ஸ்கிரீனில் ஓடத் துவங்கியதும் அவளை இன்னொருவனுக்கு மணப்பெண்ணாக பார்த்தது வரை என் காதலும் ஸ்கிரீனில் ஓடி முடிந்தது.
என் அமைதியை பார்த்த எடிட்டர் அண்ணா " ஜி இன்னும் எத்தனை நாளுக்கு உங்க பழைய கதையே நினைச்சுட்டு இருக்க போறீங்க ? முதல்ல உங்க எக்ஸ் வாங்கி கொடுத்த போனை மாத்துங்க. அத தூக்கி தூர போடுற மாதிரி அவளையும் மனசுல இருந்து தூக்கி எறிங்க ஜி. " என்றார்
கைகளுக்குள்ளே இருந்த என் கைபேசி வீட்டு நாய்குட்டி போல வாலாட்டுவதாய் ஒரு பிரம்மை. அதன் தொடுதிரை எல்லாம் கீறல்களும், உடைசல்களுமாய் இருந்தது, என் முடிந்து போன காதலை போல.


மனித ஓட்டத்தை நிறுத்திய ஒரு நோய்:

சின்னதாய் சிரித்து வைத்துவிட்டு வேலை செய்ய துவங்கினேன்.
எந்த இயற்கை இடர் வந்தாலும் நிறுத்த முடியாத இந்த மனித ஓட்டத்தை ஒரு நோய் நிறுத்தி, வீடுகளுக்குள் அடங்கிக் கிடக்க வைத்து விட்டதே. இயற்கை ஏதோ நமக்கு கூற நினைக்கிறது, என யோசித்துக் கொண்டே கோயம்பேடு மார்கெட்டுக்குள் வண்டியை விட்டேன்.
மக்கள் எந்தவித பயமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
மக்களிடம் பேச மைக்கோடு வலம் வந்தேன். அப்போது ஒரு அம்மா சொன்ன பதில் தான் யதார்த்த இந்தியாவை கண்முன் நிறுத்தியது.
" தம்பி..இது தெனம் தெனம் கூலிக்கு மாறடிக்குற கூட்டம். இன்னைக்கு உழைச்சா தான் சோறு. இப்படியே வாழ்க்கை ஓடுது. நோய் வந்துரும்னு, உழைக்காம இருந்தா பசி வந்து செத்துருவோம் தம்பி...பெரிய பெரிய பணக்கார நாட்டுக்காரங்களே இதால கஷ்டப்படுறானுங்க. நம்மல்லாம் எம்மாத்ரம். நம்மூரு ஏழை நாடு தம்பி, வந்தா உழைச்சிக்கிட்டே சாவ வேண்டியது தான் " என்ற பதில் என்னைக்கு இந்த சனத்துக்கு விடியல் வரப் போகுது என்ற ஏக்கத்தை தந்தது.


Move on செய்ய வைத்த Quarantine:

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அவரவர் ஊர்களுக்கே சென்று ஊரிலிருந்து ரிப்போர்ட் செய்யும் படி மேலிட உத்தரவு. பேருந்துகள் நிரம்பி வழிய மதுரை வரை எப்படியோ வந்து சேர்ந்து, கிடைத்த கடைசி பஸ்ஸில் ஊர் வந்து சேர்ந்தேன். மொத்த ஊரின் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டு "க்வாரன்டைன் " எனும் புதிய வகை சொல்லாடலின் மூலம் மக்கள் தனிமைபடுத்தப்பட்டனர்
மனதளவில் என்றோ தனிமைப்படுத்தப்பட்ட என் போன்ற உயிர்களுக்கு இது புதிதல்ல.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஒவ்வொரு நாளாக கடந்து சென்றது. பிரதமர் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டார். நாடே கொரோனா எனும் வைரசை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தது.
இப்படி இருக்க க்வாரன்டைன் நாட்கள் என் காயங்களுக்கு மருந்து இட்டது. தென்னை மரத் தோப்புகளின் இடையில் உட்கார்ந்து நினைவுகளின் வழித்தடங்களில் சிக்குண்டு என் ஆத்மாவை நானே கடந்த இரண்டு வருடங்களாக அழித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். இந்த செல்ஃப் டிஸ்ட்ரக்சனிலிருந்து வெளியே வர இந்த இடைவெளி தேவையானது என்பதை உணர்ந்து புதிய மனிதனாக முயற்சிகளை எடுக்க துவங்கினேன்.
இணையத்தில் மறுபடியும் அன்பானவர்களிடம் பேசினேன். மூவ் ஆன் ஆவதாக உறுதியளித்தேன்.

Truth or Dare மனங்கள் விளையாடிய விளையாட்டு:

அப்படி ஒரு நாள் டேர் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது
" இதய ஸ்மைலி அனுப்பினால் உங்களை பற்றிக் கூறுகிறேன்" என்ற ஸ்டேடஸ் வைத்ததும் என் வாட்சப் இதயங்களால் நிறைந்தது. வந்த ஒவ்வொரு இதயத்திற்கும் வாஞ்சை செய்து கொண்டிருந்த நேரத்தில்
" எனக்கும் நாலு வார்த்தை சொல்லுங்களேன். உங்ககிட்ட இருந்து கேக்கணும் போல இருக்கு,என்னை பத்தி " என்ற தமிழினியின் குறுஞ்செய்தி அவளுடன் மறுபடியும் பேச வைத்தது.
அப்படியாக ஆரம்பித்தது எங்கள் நட்பு. தமிழினி தேவதைகளின் சாயலில் இருப்பதால் மனதுக்கு பிடித்துப் போகவில்லை. நான் தவறவிட்ட கண்ணம்மாவின் நகலாக இருந்ததால் மனதுக்கு பிடித்து போய்விட்டது. டெட்டி பியருக்கு சேலை கட்டிவிட்டால் எவ்வளவு பாந்தமாக இருக்குமோ அப்படி ஒரு கண்மணி அவள். கதைகள் பகிர்ந்து கொண்டோம். தன்னை சுற்றி வரும் ஆடவர்களை பற்றி எல்லாம் அவள் வர்ணித்துக் கூறும் போது வயிறு மட்டுமல்ல இன்னமும் என்ன என்ன எரிந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டோம். தமிழினி அப்போது பிரபல மாத இதழில் எழுத்தாளராக இருந்தாள். அவள் எழுதுவதை விட எனக்கு அவளிடம் பிடித்ததே பேச்சு தான். தன்னிடம் பேசும் எல்லா ஆண்களையும் தராசில் ஏற்றிப் பார்க்கும் பெண்களுக்கு மத்தியில் , எல்லையில்லா அன்பு செய்து என் ரணங்களுக்கெல்லாம் மருந்திட்ட அவளை தேவதை என்று வர்ணித்தால் அது பாவம், அவள் தேவதைகளுக்கு மேல் அழகு சேர்க்கும் ஒரு யட்சி. ஒரு பெண் என்றாவது ஒரு கணப்பொழுது தான் தன்
மொத்த அழகையும் ஏதோ ஒரு செய்கையின் மூலம் உலகுக்கு உணர்த்துவாள். அந்த நொடியை தான் யட்சி என்று கூறுவார்கள்.
தமிழினி அனுதினமும் எனக்கு யட்சியாகவே தெரிந்தாள்.
க்வாரண்டைன் காலங்களில் என் எக்ஸ் பத்திரமாக இருப்பாளா என படபடக்கும் போது இவள் வந்து காறித் துப்பி, அவள் இன்னொருவன் மனைவி என்ற கசப்பான பொய்யை மறுபடியும் மறுபடியும் அழுத்திச் சொல்வாள்.
அன்பிற்கினியவர்கள் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் வலிக்காத மனதினை டிசைன் செய்த கடவுளுக்கு கோடானு கோடி நன்றிகளே காணிக்கை.
ஒரு புறம் மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து மக்களையும், ஓயாமல் ஆட்கொள்ளும் கடந்த காலத்திலிருந்து என்னையும் விடுதலை செய்ய வேண்டி கடவுளுக்கு எழுதிய கடுதாசிகளில் ரகசியமாக அவள் பெயரும் இருந்தது.
இன்னுமொரு காதல் என்பது பாவச் செயலோ என்று தள்ளி நின்றாலும். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என அடுத்த நாள் பொழுது புலர்வதிலிருந்து வானம் இருண்டு போகுமட்டும் பேசுவோம் .
கீர்த்தி சுரேஷின் கல்யாணம் துவங்கி
லாக்டவுனின் போது உள்ள சிரமங்கள் வரை அத்தனையும் கதைப்போம்.
ஆளுமைத்தன்மையோடு கூடிய அவளின் திமிரில் என்னை அறியாமல் கரைந்து கொண்டு இருந்தேன்.

பெண்ணுக்கு திமிரழகு:

பத்தாவது நாள் இரவும் வந்தது. 8.55 க்கு விளக்கு ஏற்றி ஒற்றுமையை தெரிவிக்க மக்கள் ஒன்று கூடிக் கொண்டிருக்கும் போது
நான் நம் பிரதமர் எப்படியும் வேலைக்காரன் இந்தி டப்பிங் பார்த்து இருப்பார் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.
மனதில் தைரியத்தை வர வைத்து அந்த 9 நிமிடங்களுக்குள் என் வாழ்விலும் விளக்கேத்த அந்த கைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.
தமிழினி அட்டெண்ட் செய்தாள். அகல்விளக்கு வெளிச்சம் போல அவளது குரல் மனதிற்குள் இருந்த துக்க இருளை விரட்டியது. 9 நிமிடங்கள் முடியும் தருவாயில் எங்கள் உரையாடல் துவங்கிற்று
ஏங்க நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா ?
ம்ம்ம் சொல்லுங்கங்க
இல்ல இன்னைக்கு நைட் எங்க வீட்டுலயும் விளக்கு ஏத்துறோம் ...
அதுக்கு நான் என்ன பண்ண
இல்ல ..நீங்க வந்து விளக்கு ஏத்துனா தானே முறைப்படி கரெக்டா இருக்கும் ..
ஒரு நொடி மெளனம்
போங்கக்க...
என்ற வெட்க புன்னகையோடு அழைப்பை " மட்டும் " துண்டித்தாள்.
வெளியே பட்டாசு சத்தம் கேட்டது. ஏதோ சாதித்தது போல உடலை வெட்டி முறித்தேன்....என்று கதையை முடிக்கும் போது ஆவென்று தனது பூவிதழ் வாயை திறந்து கொண்டு கதையை கேட்டுக் கொண்டிருந்தாள் என் மகள்.
" அப்பனுக்கும் மகளுக்கும் வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் கதை பேசுறது தான் சோலி. ஏங்க குழந்தைகிட்ட என்ன கதை பேசணும்னு வெவஸ்த இல்ல " என்று போற போக்கில் என்னையும் சீண்டினாள்.
" அம்மு...அப்போ நிறைய பேர் அந்த நோய் வந்து இறந்து போனாங்க. பாவமா இருந்துச்சு. எப்படியோ கஸ்டப்பட்டு அந்த நோயை ஒழிச்சாங்க. அதுல பேசாம செத்துருக்கலாம். அதுல உயிர் பொழைச்சு உங்க அம்மாகிட்ட வந்து மாட்டிக்கிட்டு தினம் தினம் செத்துட்டு இருக்கேன் "
உடனே என் மகள் தமிழினியை நோக்கி "அச்சச்சோ.... அப்பா பாவம்லம்மா " என்றதும்
விளக்குமாரை எடுத்து ஒரு உலுப்பு உலுப்பிவிட்டு
" உங்க ரெண்டு பேரையும் என்ன பண்றேன்னு பாருங்க " என தமிழினி விரட்ட தயாராக.
நான் என் மகளை தூக்கிக் கொண்டு ஓடினேன். வீட்டிலிருக்கும் விஜய் டிவியில் ராஜா ராணி ஓடிக்கொண்டிருந்தது " நம்மகூட இருந்தவங்க நம்மள விட்டு போயிட்டா நம்மளும் போயிடணும்னு இல்ல , என்னைக்காச்சும் ஒரு நாள் நம்ம லைஃப் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும் " என்ற வசனம் வீட்டை நிறைத்தது.... அழகான ராட்சசி இந்த பதிவை ஒலிச்சித்திரமாய் கேட்கலாம் கீழே உள்ள லிங்கில்

Related Products

Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.