சுகமான சுமை - அவள் நினைவுகள்

சுகமான சுமை - அவள் நினைவுகள்

காலை நேர போர்க்களம் :

காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஒவ்வொரு வீடும் மூன்றாம் உலகப்போர் மூளப்போகும் பதற்றத்தோடு இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாழ்க்கையின் ஓட்டம் அப்படி. பேங்கில் லோன் செக்க்ஷனில் வேலை செய்யும் எனக்கோ டார்கெட் பதற்றம் காலை கண்விழிக்கும் போதே பற்றிக் கொள்கிறது.

அப்பொழுது சமையலறையிலிருந்து ஒரு சத்தம் "எல்லா இடத்துக்கு நானே போணும்னா உங்க அப்பா என்னடி பண்றாரு? இப்ப என் முன்னாடி கண்ண கசக்கிட்டு நிக்குறதுக்கு அவர்கிட்ட போடி " என்று.

ஆபிஸுக்கு ரெடியாகி வெளியே வந்துவிட்டு என் இரு அம்மாக்களின் உரையாடலுக்கு இடையே வந்தேன். "என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்? உங்களுக்கு என்ன வேணும்?" ன்னு செகெண்ட் ஸ்டேண்டர்ட் படிக்கும் என் அம்முவை தூக்கிக் கொஞ்சிக் கொண்டு இருந்தேன்.

அலறுது வீட்டு ஸ்பீக்கர்:

"அவளுக்கு பேரண்ட்ஸ் மீட்டிங்காமா. வீட்டிலிருந்து யார்னா போய் அட்டெண்ட் பண்ணனுமாமா. திருச்சியிலருந்து ட்ரான்ஸ்பர் ஆன பிறகு இன்னும் சரியா செட்டில்கூட ஆகல. வீட்டுக்கு தேவையான சாமான் எல்லாம் இன்னைக்கு தான் வாங்கணும்னு உங்ககிட்ட சொல்லிருக்கேன்ல" என என்னவள் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

வாய் தவறி "அதுக்கு என்ன ?" என்று கேட்டுவிட்டேன்.

"அதுக்கு என்னவா .இவ உங்களுக்கும் புள்ள தானே?. நீங்க போய் மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு வாங்க. உங்களுக்கு குடும்பத்தை பார்க்க எங்க நேரம் ? உங்க பேங்க் தானே உங்க முதப் பொண்டாட்டி" என்று சிறிது சிறிதாக ரேணுகா பத்ரகாளி வெர்சன் 2.0 வாக ரீலோட் ஆகிக்கொண்டிருந்தாள். அந்த சூடு வீடு முழுக்க பரவுவதற்குள் நான் அம்முவை தூக்கிக் கொண்டு" அம்மு வாம்மா உன் அம்மா என்ன கண்ணாலே பார்த்தே எரிச்சுறதுக்குள்ள போயிடலாம் " என்று நடையை கட்டினேன்.

" இங்கேருங்க" என அதட்டலாக கூப்பிட்டாள்.

" என்னம்மா? "

" நம்ம புள்ளைக்கு ரஞ்சனின்னு அழகா பேரு வச்சிருக்கோம். இந்த அம்மு கும்முன்னு இனிமே என் காதுல கேட்டுது..." என்று முறைத்தாள்.

" ஏண்டி நம்ம புள்ளையை செல்லமா கூப்பிடகூடாதா ? "

" நீங்க யாருன்னு எனக்கு தெரியும். நீங்க எதுக்கு அவள அம்முன்னு கூப்பிடுறீங்கன்னு எனக்கு தெரியாதோ?" என மறுபடியும் அசுரத்தனமாய் ரீலோட் ஆனாள். இனி ஒரு நிமிடம் நின்றாலும் உயிருக்கு ஆபத்து என அவளைப் பார்த்து இழித்துக் கொண்டே " ஒரு கிலோ அல்வாவுக்கு இன்னைக்கு செலவு வச்சிட்டாளே " ன்னு வெளியே அம்முவை கூட்டிக்கொண்டு நடந்தேன்.

<p

இனம் புரியா ஒரு துடிதுடிப்பு:

அம்முவின் பள்ளி வாசல் நுழைந்ததுமே எங்கோ இருந்து என்னை அறியா பதற்றம் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது. வருடங்கள் கழித்து அவ்வகை பதற்றத்தை உணராலேன். நான் மாணவனாய் இருந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வந்தது போல ஒரு உணர்வு. ஏன் என புரியவில்லை ஆன்மாவிற்குள் ஒரு துடி துடிப்பு...

அப்பாவினை கைப்பிடித்துக் கூட்டிச் செல்லும் குழந்தைகளிடம் தான் எவ்வளவு தாய்மை பண்பு வழிந்தோடுகிறது. அந்த ரசிப்பிலேயே அவள் வகுப்பு வந்து சேர்ந்தேன். வகுப்பு பெற்றோர்களால் நிறைந்து வழிந்தது. அந்த இருளினில் ஒரு வெளிச்சத்தை நோக்கிய பயணம் போல் அம்மு என்னை அழைத்துச் சென்றாள். இனியொரு தடவை எது நடக்காது என்று நினைத்திருந்தேனோ அது நடந்தது.

அம்மு - பெயருக்கு சொந்தக்காரி:

அம்மு கூட்டிச்சென்ற இடத்தில் அவளின் பெயருக்கான காரணக்காரி உட்கார்ந்திருந்தாள். என்னைக் கண்டதும் கண்விரிய கண்ணாடி அதிர சட்டென்று எழுந்துவிட்டாள். மனம் பதினைந்து வருடங்களுக்கு பின்னாடிச் சென்று சில காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

"உனக்கு ஒரு வேலை இருந்திருந்தா என்னை கல்யாணம் பண்ணியிருப்பல்லடா ? "

" என்னை மறந்துர மாட்டல்ல ?" போன்ற வாழ்விற்கும் மறக்க முடியாத வசனங்களை சொன்னவளே என் மகளின் ஆசிரியையாக நின்றுகொண்டிருந்தாள். அம்மு என்ற ‘ஆனந்தி’. கொஞ்சம் வயது ஏறி இருந்தாலும் கலையான அவள் முகத்தை இப்போதும் மகாலட்சுமி பெர்மணன்ட் லீசுக்கு எடுத்திருந்தாள்.

நீ ???...சாரி நீங்க ?

ரஞ்சனி என் பொண்ணு தான்..

திருச்சில பேங்குல வொர்க் பண்ணிட்டு இருந்தீங்கல்ல ? என்ற அவள் கேள்வி இன்னமும் அவள் மனதில் நான் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டேன். இறுதியாக கல்யாணம் முடிந்த கையோடு சென்னை சென்றுவிட்டாள் என்பது மட்டுமே எனக்கு தெரிந்து இருந்தது.

என் முகப்புத்தகத்தின் ஓரத்தில் இவள் மறைந்து பார்த்துக்கொண்டிருப்பாள் போலும்.

.

எங்களைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி

"அப்பா நான் சொன்னேன்ல..நான்னா ஆனந்தி மேம்க்கு ரொம்ப புடிக்கும்" என்று கூறினாள்.

வழக்கம் போல வீட்டிலிருக்கும் போது ஆனந்தி மேம் என்று அவள் கதை சொல்லும் போது எல்லாம் அவள் "என் ஆனந்தி" என்று தெரியாமல் போய்விட்டது.

அம்முவை அம்மு என அழைத்த தருணம்:

பொதுவான விசாரிப்புகளுக்கு மத்தியில் இருவரது மனங்களிலும் நிறைவேறாத காதலின் மிச்சப் பாதி கொப்பளித்துக் கொண்டு இருந்தது. என் மகள் அவளுக்கு பிடித்துப் போனதில் பெரிய வியப்பில்லை. இரத்தத்திலே என் மீதான காதல் கடத்தப்பட்டு இருக்கின்றது. கூட்டம் அதிகமானதால் " நான் கெளம்புறேன் அம்மு" என்று வாய் தவறிச் சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டேன். என் மகள் திகைத்து என்னை எட்டிப் பார்த்தாள். புன்முறுவலோடு “இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றாள் ஆனந்தி.

வெளியே நடந்துவந்தேன்.

" அப்பா உனக்கு முன்னாடியே ஆனந்தி மேமை தெரியுமா ?" எனக் கேட்டாள்.

"நமக்கு அவங்க தூரத்து சொந்தம் மாதிரிம்மா" என மழுப்பினேன் ஏனென்றால் வீட்டில் ரஞ்சனியை அம்மு எனக் கூப்பிடாதே என்றவளின் எச்சரிக்கை கண் முன்னாடி வந்து போக " உஷாராகிக்கடா குமாரு " என மனசாட்சி கூறியது.

ஆனால் என் மகள் விடுவதாக இல்லை

" சொந்தம்னா ? " என கேள்வியை தொடுத்தாள்.

" ஒரு வகையில அவங்க உனக்கு சித்தி முறை வரும் மா " என அவளுக்கு டாட்டா காட்டினேன்.

வலி தரும் காதலின் நினைவுகள்:

என் பைக் அலுவலகத்தை முன்னோக்கி செல்ல என் நினைவுகள் அம்முவான ஆனந்தியை நினைத்து பின்னோக்கிச் சென்றது. இந்த நிறைவேறாத காதலின் நினைவுகளில் தான் எத்தனை வலி நிறைந்த சுகங்கள். இனிமேல் அடிக்கடி பேரன்ட்ஸ் மீட்டிங் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சிரித்தேன். என் நரைமுடியிலும் இள நரம்புகள் சேர்ந்து சிரித்தன..Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.