தமிழ் பிடிக்கும் என்றால் இந்த 5 தளங்களும் நிச்சயம் பிடிக்கும் !

தமிழ் பிடிக்கும் என்றால் இந்த 5 தளங்களும் நிச்சயம் பிடிக்கும் !
தமிழ் மொழியில் பல இணையதளங்களை பார்த்திருப்போம், ஆனால் நல்ல தமிழில் நல்ல தகவல்களை தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமான செயலிகளை உள்ளடக்கி தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் தளங்களில் முதன்மையான 5 தளங்களை மட்டும் இங்கு பதிவுசெய்துள்ளோம். தமிழ் மொழியின் ஆழத்தை தெளிவாக எடுத்துரைக்கும், இலக்கணம், மொழி ஆளுமை என அனைத்திலும் கவனம் கொண்டு, தமிழில் அதிகம் அறியப்படாத, அல்லது கவனம் கொள்ளப்படாத முக்கியமான தகவல்களை வெளியிடுவது இவர்களின் சிறப்பு அம்சங்கள். இதில் தந்துள்ள வரிசை இவர்களின் தரத்தை பொறுத்தோ செயல்பாடுகளை பொறுத்தோ இல்லை, இந்த பதிவை எழுதும் போது எங்கள் மனதில் எது வசதியாக இருந்ததோ அதை தான் வரிசை படுத்தி காட்டியுள்ளோம்.

5. Tamil.Changathi.com

Tamil.changathi.com Blog Image

தமிழ் மொழியில் எளிமையாக எழுத பல இணையங்கள் உள்ளன, ஆனால் இந்த தளம் அளவிற்கு மிகவும் எளிமையான, இலக்கண - எழுத்து பிழை இல்லாத ஓர் செயலி என்றால் அது இந்த தளத்திற்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் ? இந்த பதிவை கூட நாங்கள் எழுத பயன்படுத்தும் இணையம் இந்த tamil.changathi.com தான். இந்த தளத்தில் இது மட்டுமின்றி தமிழ் அகராதி, english to tamil typing, தமிழ் search, எழுதியவற்றை படமாக மாற்றும் வசதி, தமிழ் எழுத்துருக்கள்(Tamil Fonts) என பல வசதிகள் இந்த தளத்தில் உள்ளன.

இந்த தளத்தில் கணக்கை பதிவுசெய்வதன் மூலம், நாம் எழுதியதை சேமிக்கும் வசதியும் வரும். ஆங்கிலத்தில் எளிமையாக தட்டச்சு செய்தாலே போதும் சரியான தமிழ் வார்த்தை எழுத்து பிழை ஏதும் இன்றி நமக்கு உடனே கிடைக்கும், அப்படியே எதாவது தவறு இருந்தால் backspace கி பயன்படுத்தினால் போதும் இதர சொற்கள் வேறு எழுத்து மாதிரிகளுடன் நமக்கு காண்பிக்கப்படும், அதில் நமக்கு எது சரியோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இனி அனைவரும் அழகிய தமிழில் பிழை ஏதும் இன்றி facebook, மற்றும் இதர இணையதளங்களில் தமிழில் பதிவு செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

Collar T-shirts Ad image

4. Valaitamil.com

Valai tamil happy birthday song in tamil

தமிழ் மொழியில் இணையதளங்கள் உருவாக்குவது என்பது பொதுவாக எந்த பெரிய வருமானம் பெரும் வசதிகள் இல்லாத காலம் ஒன்று சமீபம் வரை இருந்தது, எனினும் நம் பைந்தமிழில் செய்தி, அரசியல், சோதிடம், அறிவியல், மருத்துவம், உணவு என அனைத்து துறைகளிலும் உள்ள தரவுகளை பதிவுசெய்வதில் முதன்மை இடத்தை பெற்றுள்ளது இந்த தளம். தமிழ் தளங்கள் என்றாலே ஆபாசமான விஷயங்கள் மட்டுமே அதிக பார்வையாளர்களை பெற்ற காலத்தை பின்னுக்கு தள்ளி நல்ல விசயங்களை, செய்திகளை மட்டுமே தருவதில் கண்ணும் கருத்துமாக இருப்பது இவர்களின் சிறப்பு.

முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல், இந்த தளத்தை உருவாக்கிய குழு தான் முதன் முதலாக தமிழில் பிறந்த நாள் பாடலை உருவாக்கி சமூக வலைத்தளங்களில், youtube தளத்திலும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது, அது மட்டுமில்லாமல் திருக்குறளை வைத்து 1330 பேர் மூலம் உலகில் முதன்முறையாக பதிவு செய்யும் வேலைகளும் செய்து வருகின்றனர், இதற்கிடையே நம் ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா போன்ற பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் Tamil Anthem ஒன்றையும் உருவாக்கி பாடல் வடிவில் வெளியிட்டனர் என்பது பாராட்டுக்குரியது. ஆன்மிகம், தற்சார்பு வாழ்க்கை, உடல் நலம் என பல அரிய பதிவுகளை எளிய தமிழில் தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி வருகின்றனர். இணைய ரேடியோ, இணைய தொலைக்காட்சி என இவர்களின் சேவை நீண்டு கொண்டே செல்கிறது.

3. Eluthu.com

eluthu dot com website tamil kavithaigal tamil love quotes

தமிழ் கவிதைகளுக்கான தனிச்சிறப்பு வாய்ந்த தளம் தான் இந்த எழுத்து.காம், படைப்புத்திறன் என்பது நம் தமிழர்களில் பலருக்கு அதிகம், பல்வேறு தளங்களில் இயங்கி வரும் மக்கள் தங்கள் தனித்திறமைகளில் ஒன்றான எழுத்து திறனை நிரூபிக்க கிடைக்க பெற்ற தளம் என்றால் அது இந்த eluthu.com தான். அவரவருக்கு பிடித்த தலைப்புகளில் தங்கள் படைப்புக்களை பதிவு செய்யலாம், ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கானோர் பார்வையிடும் இத்தளத்தில் உங்கள் படைப்பு இடம் பெறுவதன் மூலம் பெரிய வாசகர் வட்டத்தையும், புகழையும் பெற இயலும் (உங்கள் படைப்பு தரமானதாகவும், பெரும்பாலோர்க்கு பிடிக்கும் வண்ணம் இருந்தால்).

எழுத்தால் உயர்ந்தவர் பலர் உண்டு, அந்த காலத்து திருவள்ளுவர் முதல், சென்ற நூற்றாண்டின் பாரதி, சமீப காலத்து வாலி, கண்ணதாசன், எழுத்து சித்தர் பாலகுமாரன், நா. முத்துக்குமார், இப்போது உள்ள வைரமுத்து, மதன் கார்க்கி போன்ற சினிமாவில் பாடல் எழுதுபவர்கள் ஆனாலும் சரி, எழுத்தால் ஆட்சியை பிடித்த கலைஞர் கருணாநிதியானாலும் சரி, எழுத்து வரமாக கிடைத்தால் அவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவது உறுதி.

இது மட்டும் அல்லாது தமிழ் எழுதும் முறையை மிகவும் எளிமையாக படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர், இவர்களின் கடின உழைப்பே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் மிகையாகாது, நகைச்சுவை, பொன்மொழிகள், தமிழ் எண்கள், விளையாட்டு, கருத்து கணிப்பு என எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தளம், இவர்களின் சிறப்பே இணையத்தை அணுகும் அனைவரையும் பங்களிக்க செய்ய எளிமையான வழிமுறைகளை கையாண்டு மாபெரும் எழுத்து காப்பகங்களை உருவாக்கி காத்து வருவது தான். நாமும் போட்டிகளில், கருத்து கணிப்புகளில் பங்கு மட்டும் கொள்ளாமல், உருவாக்கி மக்கள் மனதையும் அறிய பெரும் உதவியாக உள்ளது இந்த தளம்.

2. Tamillexicon.com

agaramuthali tamil lexicon website online

அகரமுதலி என்ற பெயரில் tamillexicon.com என்ற தளத்தின் மூலமாக தமிழ் மொழியின் மூலக்கூறுகளை தெளிவாக உரைக்கும் இந்த தளம் அவர்கள் சொல்வது போல செந்தமிழின் சொற்களஞ்சியம் என்றே சொல்லலாம், எந்த தமிழ் சொல்லுக்கும் இணையான ஆங்கில சொல், மாற்று சொல், english to tamil, tamil to english, சுருக்குச்சொல் - குறுஞ்சொல், என நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொல்லை இலகுவாக வழங்கிவருகிறது.

நமக்கு தமிழ் பிடிக்கும் என்றால் நிச்சயம் பயன் படுத்தவேண்டிய தளம் என்பதில் எந்த மாற்று கருத்துகளுக்கும் இடம் இல்லை, கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தி எழுதப்படும் தமிழ் சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்களை வழங்குவது இவர்களின் தனிச்சிறப்பு. இது மட்டுமின்றி 'எழுதி' என்ற தனி செயலியை இந்த தளத்தில் வழங்கியுள்ளனர், அதில் நாம் நம் விருப்பப்படி பாமினி எழுத்துரு - யூனிகோடு வகை எழுத்து முறை, யுனிகோடு -> பாமினி, TSCII -> UNICODE, கூகுள் உள்ளீடு, ரோமன் தமிழ் எழுத்துரு என பல வடிவங்களில் தட்டச்சு செய்ய வசதி வழங்கியுள்ளனர்.

இனி நம் பேச்சு தமிழும் மேன்மைபெறும்.

round neck tshirts ad image for blog

1. Neechalkaran.com

neechalkaran tamil apps

எண்ணத்தின் விளைச்சல் எழுத்துக்களின் நீச்சல் என்ற தலையங்கத்துடன் கூடிய இணையம் தான் இந்த நீச்சல்காரன்.காம் கணினித்தமிழ் அறிவியலில் தேர்ச்சி பெற்ற ஒரே மனிதரின் உழைப்பு தான் இந்த நீச்சல்காரன்., மணல்வீடு, எதிர்நீச்சல், முத்துக்குளியல், தமிழ்ப்புள்ளி, அப்ஸ்புள்ளி, வாணி, நாவி என பல்வேறு செயலிகளை உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக தந்து வருகிறார். பெற்றவை, கற்றவை என பல கணித்தமிழ் தகவல்களை இலவசமாக பதிந்து இத்துறையில் வெற்றிபெற முனைபவர்களுக்கு ஒரு புதையலாக விளங்கி வருகிறது இத்தளம்.

தமிழ் எழுத்து பிழை திருத்தி - 'வாணி' என்று அழைக்கப்பெறும் இச்செயலி நம்மை போன்ற தமிழில் பதிவிடும் நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,. என்ன தான் நமக்கு நம் மொழி மீது அளவில்லா பற்று இருந்தாலும், சில நேரங்களில் எழுத்து பிழை அல்லாது இலக்கண பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தீர்க்கத்தான் சந்திப்பிழை திருத்தி எனப்படும் 'நாவி' செயலியாகும். இதுபோல் தமிழ் கீச்சுகள் என்ற twitter தானியங்கி செயலி தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ஒற்றன், ஆடு-புலியாட்டம், மென்கோலம், கோலாசுரபி என பல்வேறு கணித்தமிழ் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

-----------

நாம் கற்ற கல்வி, பெற்ற தனித்திறன் தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் தம் பிறந்த இனத்திற்காகவும், மொழிக்கும் அர்ப்பணித்து பங்களிப்பை தருவது என்பது நிச்சயம் பாராட்டுதலுக்கு உரிய செயலாகும். பல வேடிக்கை மனிதரைபோல் பேசி மட்டுமே இல்லாமல்., செயலில் இறங்கி அற்புதமான படைப்புக்களை அளித்து வரும் இவர்களை போற்றி, ஆதரவளிப்பது நம் தலையாய கடமையாகும். இதுபோன்று நம் தமிழில் பல அரிய செயலிகளை, இணையங்களை கட்டமைக்க இந்த கட்டுரை ஓர் நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்புகிறோம்.

நன்றி.
இது போன்ற பல கட்டுரைகள் படைக்க எங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இதை ஒரு பகிர்வு செய்யலாமே !Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.