இசக்கி அம்மன் பாகம் - II

இசக்கி அம்மன் வரலாறு

மண் மண்டி கிடக்கும் ஒரு மண்டபம் எங்கள் ஊரின் எல்லையில் உள்ளது. ஒரு காலத்தில் மன்னர் பயணத்தின் போது அங்கு வந்து தங்கி செல்வாராம். அங்கு , அந்த மண்டபம் இருந்ததால் மண்முங்கி மண்டபம் என அந்த இடத்தை அழைக்கிறோம். அந்த மண்முங்கிய மண்டபத்தின் அருகே தான், இசக்கி அம்மன் கோவில் இருந்தது. அந்த அம்மன் கருணையும் கோபமுமாய் இணைந்து பொலிவோடு ஒரு குழந்தையை கையில் ஏந்தி நின்று கொண்டிருந்தாள். திருவிழாவில் வில் பூட்டி அவளது கதையை பாடி சாமியை வரவழைக்கும் முயற்சியில் வில்லிசை கலைஞர்கள் இருக்க, சாந்தமான குணம் கொண்ட ஒரு பெண் வெகுண்டு எழுந்து ஆடி, கொதிக்கும் எண்ணையில் கை விட்டு பக்தர்களுக்கு பலகாரம் சுட்டுக் கொடுத்தார். அந்த பெண் மீது இசக்கி அம்மன் வந்து விட்டதாக சொன்னார்கள். சாந்த ஸ்வரூபிணியான அந்த அம்மன் சிலைக்குள் இத்தனை வேகமா ? இந்த கோப முகத்திற்கு பின்னால் உள்ள கதை தான் என்ன ?

இன்று “ கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் “ என்று கணவர்கள் செய்யும் அக்கிரமங்களை, அடக்குமுறைகளை சகித்து கொண்டு வாழும் பெண்களுக்கு மத்தியில், “ திமிறி எழு திருப்பி அடி “ என்று தர்மம் காத்த கதை தான் இசக்கி அம்மனுடையது சம்பந்தர் காலத்தில் இருந்தே இசக்கி அம்மனை பற்றி குறிப்புகள் இருப்பதால் சம்பந்தருக்கும் முன்னரே இசக்கி அம்மன் வழிபாடு இருந்து வருகிறது என்று கூறலாம்.

வேலவன் மற்றும் லட்சுமியின் அறிமுகம் :

வடநாட்டில் அந்நகரி எனும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் சிவன் இல்லையேல் சக்தி இல்லை எனும் இல்லறத்தின் மூல தத்துவமே உருவான அம்மையப்பன் ஆலயம் உள்ளது. 61 பிராமணர்கள் அனுதினம் பூஜை செய்து வரும் மிகபெரும் ஆலயம் அது. அந்த கோவிலின் தலைமை பூசாரியான சிவபாப்பான் – சிவஆச்சி தம்பதிகள் வெகு நாட்கள் இறைவனிடம் வேண்டி “வேலவன்” எனும் ஆண் பிள்ளையை பெற்று எடுத்தார்கள். அந்த வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக காலபோக்கில் அந்த கோவிலின் பூசாரியாக வேலவனே மாறிவிட்டான்.

தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளை அறிமுகப்படுத்தும் போது தூரத்தில் தென்றல் காற்று வீசும், பூக்கள் தன்னாலே கீழே விழும் அப்படிபட்ட அரிய வகை காட்சிகள் எல்லாம் உண்மையிலேயே ஒரு அழகு பெண்ணிற்கு நிகழுமெனில் அது இந்த கதையின் கதாநாயகி லட்சுமிக்கே. அவள், அதே அம்மையப்பன் கோவிலில் நாட்டியம் ஆடும் 41 பெண்களின் தலைவியான சிவகாமி தாசியின் மகள் தான் லட்சுமி. இந்த லட்சுமிக்கு திருகண்டன் நட்டுவர் எனும் ஒரு அண்ணனும் உண்டு. ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு பணிவிடை செய்யும் தெய்வ பத்தினிகளாக இருந்த தேவதாசி பெண்களை இழிவுபடுத்திய முழு பாவமும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தையே சேரும். அங்கிருந்து தான் பெண் அடிமைத்தனம், தன்னுடைய சிறகுகளை விரிக்கின்றது.

காலபோக்கில் வேலவனும் லட்சுமியும் நாள் ஒரு வண்ணமும் பொழுது ஒரு மேனியுமாக வளர்ந்து அம்மையப்பன் ஆலயத்தில் சேவை செய்து வருகின்றனர். ஒருநாள் நாட்டியம் ஆட வந்த லட்சுமியை வேலவன் பார்த்துவிட்டான். கவுதம் வாசுதேவ மேனனின் படங்களில் எப்போதுமே ஒரு அழகியல் இருக்கும். அவர் பதிவு செய்யும் கதாநாயகிகளின் சாயலில் அது இழைந்தோடும். வேலவனுக்கு அவள் ஜெஸ்ஸியாகவே தெரிந்து இருக்க கூடும். பார்த்த மாத்திரத்தில் லட்சுமியின் மீது மையல் கொண்டு விட்ட வேலவன் பெண் பித்தனானான்.

சிவகாமி தாசியின் சூழ்ச்சி :

ஒருநாள் கோவிலில் யாரும் இல்லாதபோது லட்சுமியின் காலடியில் மயங்கி விழுந்தவன் போல நடித்தான் வேலவன். சாமிக்கே பணிவிடை செய்யும் பிராமணர் தன் காலில் விழுந்ததால் பதறி அவனை அணைத்து வழிநடத்தி தன் வீட்டிற்கு அழைத்து வருகிறாள் லட்சுமி. வேலவனை தன் மகள் புளியம் கொம்பாய் பிடித்துவிட்டதாக நினைத்து அவனது சொத்தின் மீது கண் வைக்கிறாள் சிவகாமி தாசி. தாயோ சொத்தை பார்க்க, மகள் லட்சுமியோ வேலவனை உற்ற துணையாக கருதி காதல் கொள்கிறாள். நாட்கள் ஓடுகின்றன, லட்சுமியின் மீதுள்ள ஆசையில் தாசியின் வீட்டில் எண்ணெய் இருக்கும் வரை எரியும் திரியாகவே மாறி போனான் வேலவன். சொத்தெல்லாம் காதல் பரிசுகளாகவும், சிவகாமியின் கையில் பணமாகவும் குவிந்தன. வேலவனின் கையில் இருப்பதை எல்லாம் இழந்த கதை தெரிந்த சிவகாமி, ஒருநாள் அவனை “காசு இல்லாமல் இந்த பக்கம் வராதே“ என்று விரட்டிவிட்டாள். கையில் காசின்றி வேலவனோ பரதேசம் செல்ல எண்ணி தேசாந்திரியாக நடையை கட்டினான். ஏதும் அறியாது வீடு வந்து சேர்ந்த லட்சுமி தன் தாயாரிடம்,

“ ஏன் மா அவர் வந்தாரா ? “ எனக் கேட்டாள்.

“ யார் அந்த அவர் “ என்று தெரியாததை போல் கேட்டாள் சிவகாமி.

“ அது தான் மா அவர் தான் “ என்று வெட்கப்பட்டுக் கொண்டே பதிலுரைத்தாள் லட்சுமி.

“ யாரு அந்த பிச்சக்கார பய பூசாரியா ? வந்தான், வந்தான். கையில காசு இல்லன்னு நான் தான் நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்தை கேட்டு விட்டேன் “ என சிவகாமி சொல்ல கேட்ட லட்சுமி,

“ இந்த ஜிமிக்கி யாரு வாங்கி தந்தது அம்மா ?

இந்த காசி மாலை யாரு வாங்கி தந்தது அம்மா ? “ என கோபம் தெறிக்க கேள்விகளை கண்ணகி உடைத்து எறிந்த சிலம்பாக தன் அம்மாவை நோக்கி வீசினாள்.

“ அவன் தான் “ என்று ஈனஸ்வரத்தில் அம்மா பதிலுரைக்க, அதை பொருட்படுத்தாது காதலன் சென்ற திசை நோக்கி தன் காதலை தேடிச் சென்றாள் லட்சுமி.

“ஆணோட காதல் கைரேகை போல, பெண்ணோட காதல் கைக்குட்டை போல “ என்று லிரிக்ஸ் எழுதும் கவிஞர்களுக்கு உண்மையான காதலின் அர்த்தம் புரிவதே இல்லை. அது தன் மீது பொழியப்பட்ட அன்பிற்காக எந்த எல்லைக்கும் போகும். அத்துவான காட்டில் தனது தாயாரால் விரட்டி அடிக்கப்பட்ட வேலவனை சந்திக்கிறாள்.

“ நீங்க போற இடம் தான் இனி நான் போற திசை “ என்று இருவரும் ஒரு வழியாக சேர்ந்தனர். காட்டில் அலைந்த லட்சுமி சோர்வில் வேலவனின் மடியினில் துயில் கொண்டாள். காட்டின் காற்றில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை உற்று நோக்கினான்.

வேலவனின் ஐயமும் விபரீதமும் :

“ நாம் வாங்கி கொடுத்த நகை தானே லட்சுமி அணிந்திருக்கிறாள், இவை அனைத்தும் நம்மை சுரண்டி சிவகாமி பிழைத்தது தானே. நாளைக்கு என் கையில காசு தீர்ந்தால் லட்சுமியும், நம்மை இப்படி விரட்ட மாட்டாள் என்று என்ன நிச்சயம் ? ' தாயை போல பிள்ளை, நூலை போல சேலை' என்பதற்கிணங்க தாயை போல தானே புள்ளையும் இருக்கும் “ என்று தனக்குள் குமுறிக் கொண்டிருக்கும் வன்மம் நிறைந்த மனதோடு பேசினான்.

தூக்கம் கலையாது லட்சுமியின் தலையை மண்மேடு அமைத்து அதில் தூங்க வைத்தான். வன்மத்தின் உச்சியில் காயம்பட்ட ஓநாயாய் சிந்தித்த வேலவன், அவள் தலையில் கல்லை போட்டு நாட்டியம் ஆடிய நாயகியின் கதையை முடித்தான். அவள் அணிந்து இருந்த நகைகளை கொண்டு போய் காசியில் விற்று தன் புது வாழ்வை துவங்க எண்ணினான்.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தர் சொன்னது பொய்யாகுமா ?

மனித ரத்தத்தை பார்த்தால் தாகம் வரும் என்று சொல்வார்கள். கிணற்றில் சென்று தண்ணீர் குடிக்க சென்ற வேலவன் பாம்பு தீண்டி இறந்து போனான். அவன் கவர்ந்து செல்ல நினைத்த லட்சுமியின் நகைகள் யாருக்கும் பயனில்லாமல் அந்த காட்டின் கிணற்றுக்குள் விழுந்தது.

மத்தளம் தட்ட சென்ற திருகண்டன் நட்டுவர் சிவகாமியிடம் “ தங்கை லட்சுமி எங்கே ? “ என்று கேட்க, நடந்தவை அறிந்து காடு வந்து சேர்ந்த திருகண்டன் தலை சிதறி இறந்த லட்சுமியை கண்டு தானும் உயிர் துறக்கிறான். அங்கு நடந்த அனைத்துக்கும் சாட்சி லட்சுமி தூங்க நிழல் தந்த கள்ளிச்செடி தான்.

ஈசனின் வரம் :

உடலை விட்டு பிரிந்த ஆத்மாக்கள் கயிலை சென்றன. கயிலையின் வாசலில் வேலவனின் ஆத்மா நின்று விட, லட்சுமியும் அவள் அண்ணன் ஆவியும் எம்பெருமான் சிவனிடம் முறையிட்டன.

“ காதலை நம்பி, காதலனை நம்பி வந்த என்னை அந்த மகாபாவி கொன்றுவிட்டான். அடுத்த பிறவியில் நான் என் கையால் அவனை கொல்ல வேண்டும், அதற்கு நானும் என் அண்ணனும் ஒரே வயிற்றில் பிறக்க வேண்டும் “ என வெள்ளிப்பனித்தலையரிடம் வரம் கேட்க , சோழ நாட்டு செம்பிய மகாராஜாவின் மனைவி திருத்தேவி வயிற்றில் பிறக்கச் செய்தார். சோழநாட்டு ராஜாவின் குழந்தைகளாய் பிறந்த அண்ணன் தங்கைகளுக்கு நீலராஜன், நீலிதேவி என்று பெயரிட்டனர். வேலவனை காவிரிபூம்பட்டினம் எனும் ஊரில் மாநாய்க்கன் செட்டியாரின் மகனாக பிறக்க வைத்து நீலியின் கதைக்கு துவக்கம் கொடுக்கிறார் சிவனார். அவன் பெயர் அனந்த செட்டி.

நீலியின் சபதம் :

சோழ நாட்டு ராஜாவின் பிள்ளைகளாய் பிறக்கும் லட்சுமிக்கும் , திருகண்டனுக்கும் முன்ஜென்ம நினைவுகள் இருப்பதனால், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் பசி ஆற்றவில்லை என்று கோனார்களின் ஆடு மாடுகளை பேய் உருவம் கொண்டு அடித்து தின்று வந்தனர். குழந்தைகள் தான் இதற்கு காரணம் என்பதனை அறிந்த மன்னரோ, பேய் குழந்தைகள் அல்லவா நமக்கு பிறந்துள்ளது என்று வருத்தப்பட்டு காட்டில் குழந்தைகளை விட்டு விட்டார். காட்டில் வேப்பமர நிழலில் அண்ணனும் தங்கையும் வளர்ந்து வருகிறார்கள். காட்டில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்து வருகிறார்கள். அண்ணன் ஓய்வெடுக்க தங்கை வேட்டையாட சென்ற போது, வேப்பமரத்தை வெட்ட வந்த அந்த ஊரின் வேளாளர்கள் வேப்பமரத்தை வெட்டி சென்றதில், அதில் தங்கி இருந்த நீலன் மாண்டான்.

அன்பு காட்டிய காதலன் ஏமாற்றிக் கொன்றான், ஆறுதலாய் இருந்த அண்ணனை விதி எடுத்து சென்றது, என வாழ்வில் உச்ச பட்ச துன்பங்களை எல்லாம் அனுபவித்த நீலி தன் அண்ணனை கொன்றவர்களை அழிப்பேன் என சபதம் எடுத்தாள்.

மறுபுறம்,

காவிரிபூம்பட்டினத்தில் செட்டியாரின் மகனாக பிறந்த ஆனந்த செட்டியின் ஜாதகத்தை அலசிய ஜோதிடர் “ நீ எக்காரணம் கொண்டும் வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள கூடாது, அப்படி மேற்கொண்டால் இரவில் எங்கும் தங்க கூடாது, தென்திசைக்கு போகவே கூடாது, ஒரு பெண்ணால் உன் உயிருக்கு ஆபத்து” என்று அறிவுறுத்தினார். இதனால் வணிகம் செய்ய முடியாத அனந்த செட்டி ஒரு மந்திரவாதியிடம் பாதுகாப்பிற்காக ஒரு மந்திர கத்தியை பெற்றான். மறுக்கவே முடியாத காரணத்தால் தென்திசைக்கு செல்ல வேண்டிய வேலை வர , அனந்த செட்டி பயணத்தை தொடங்கினான்.

“ எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும் இமையில் ஏது உறக்கம் உறக்கம்” என இந்த கால காஞ்சனாவை போல வனத்தில் சுற்றி திரிந்தாள் நீலிதேவி. ராகவா லாரன்ஸுக்கு இந்த கதை தெரிந்தால் காஞ்சனாவின் அடுத்த ரிலீஸ் வெகு சீக்கிரமே நிகழும். அனந்த செட்டியை வனத்தில் கண்டு கொண்ட நீலி பெண்ணாக உருவம் பெற்று தாம்பூலத்தோடு செட்டியை வரவேற்கிறாள். அவளை பொருட்படுத்தாது ஊருக்குள் நுழைகிறான் செட்டி. கத்தி அவன் கையில் இருப்பதால் நீலியால் அவனை நெருங்கவே முடியவில்லை. எந்த கள்ளிச்செடி தன் சாவிற்கு காரணமாக இருந்ததோ அந்த கள்ளிச்செடியை குழந்தை ஆக்கினாள் .

பின் நீலி அந்த அனந்த செட்டியினிடம் ,“ அத்தான் இப்படி என்னையும் குழந்தையும் விட்டு போறியளே, இது உங்களுக்கு நல்லா இருக்கா ? “ என்று கேட்கிறாள்.

“ இது என்ன வம்பா போச்சு ...நான் உன் புருஷன் இல்லம்மா “ என வேகம் பிடித்த செட்டியை துரத்தி கொண்டு

“ ஓடி ஓடி ஒளியுரீரே செட்டியாரே...அத்தானே உம்மை ஒட்டி நானும் வாறேன் செட்டியாரே “

என பாடி நீலி குழந்தையோடு வந்து நீதி கேட்டாள். இதை கண்ட ஊரார் பஞ்சாயத்தில் வைத்து தீர்ப்பு கொடுக்க முற்படுகையில், கையில் இருக்கும் குழந்தையை கீழேவிட அது ஆனந்த செட்டியை அப்பா என்று அழைத்து கொண்டு அருகில் வந்த பொழுது தான், ஆனந்த செட்டிக்கு ஜோதிடரின் எச்சரிக்கை ஞாபகம் வந்தது.

பஞ்சாயத்தை அடுத்த நாள் வைத்துக் கொள்வதாக சொன்ன ஊரார் செட்டியையும், நீலியையும் ஊரில் தங்க சொன்னார்கள்.

நீலியின் சபதம் நிறைவேற்றம் :

உடனே நீலி “ அவர் கையில் ஒரு கத்தி இருக்கிறது. அதை வைத்து எங்களை கொன்று விடுவார் “ என ஊராரிடம் சொல்ல, கத்தியை ஊரார் பிடுங்கி வைத்துகொண்டனர்.

கத்தி பிடுங்கப்பட்டதும், சாவு பயத்தில் செட்டி உறங்க, உறக்கத்திலிருந்து எழுப்பிய நீலி, பழைய ஜென்ம கதையை கூறி செட்டியை கொன்று குடலை உருவி மாலையாக போட்டு ரண வேட்டை ஆடினாள். தன் அண்ணனை கொன்ற வேளாளர்களை கூண்டோடு எரித்து அந்த ஊரையே நாசமாக்கி வனங்களில் சுற்றி திரிந்த நீலி, வந்து சேர்ந்த இடம் முப்பந்தல் எனும் ஊர். அங்கு நிலை கொண்ட நீலி, இசக்கி அம்மனாக தெய்வ நிலை அடைந்து, இன்று தென் மாவட்ட மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக இருக்கிறாள். முப்பந்தல் குமரி மாவட்டத்தின் எல்லைகளில் ஒன்று.

இப்போது நான் அந்த ஊர் திருவிழாவில் நின்று கொண்டு இருந்தேன். இசக்கி அம்மன் வந்ததாக சொல்லி ஆடிய அந்த பெண் ஆங்கார ரூபமாக தெரிந்தார். அப்போது ஒருத்தர்

“ எப்பா ஏ இசக்கி ஆத்தா துடியா இருக்காளப்பா..அந்த வீரியம் குறைய அவளை இலங்குல (ஒரு வகை பெட்டி ) அடைச்சு வைங்கப்போவ், அடுத்த கொடைக்கு அவ ஆடட்டும். “ என்றார்

தன் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், தன்னை நம்பி வரும் மக்களின் வாழ்வில் நடந்து விடாமல் காப்பதாகட்டும், கள்ளி செடியை குழந்தையாக்கியதாகட்டும். எவ்வளவு பழி வாங்கும் உணர்வு உடையவளோ, அதை விட ஒரு படி மேலாக கருணை உள்ளம் கொண்டவள் இசக்கி அம்மன்.

அதர்மத்தை கணவனே செய்தாலும் அதனை தட்டி கேட்க வேண்டும் என்ற இசக்கியின் வாழ்க்கை தத்துவம் பெண்களுக்கெல்லாம் ஒரு பாடம்.

கதைகள் தொடரும் ......

வாட்சப் தமிழா விவேக்Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.