ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆலய பிரவேசங்கள்

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆலய பிரவேசங்கள் பற்றிய வரலாறு

போற்றுதும் போற்றுதும் மாமதுரை போற்றுதும்,

துங்கா நகர் போற்றுதும்,

சங்கம் வளர்த்த மாமதுரை போற்றுதும்"- என்பதற்கிணங்க

அழகுற விளங்குவது மதுரை மாநகர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர் வாழந்த ஊரும் இதுவே. இந்த மதுரை என்னும் ஊர் ஒரு காலத்தில் மருத மரம் நிறைந்த காடாய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இசை வல்லுனர்களான ஜி.என்.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை மணி ஐயர், மதுரை சோமு, டி.எம்.சௌந்தரராசன் ஆகியோர் பிறந்த ஊரும் இந்த மதுரையே. இத்தகையோர் வாழ்ந்த இந்த மாநகரில் மீனாட்சி அம்மன் குடிகொண்டு வீற்றிருக்கும் தலமும் அமைந்துள்ளது. தமிழ் கலாசாரத்திற்கு ஆணிவேராய் விளங்கும் இடமும் இதுவே ஆகும். இவற்றை பற்றிய வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம்.

மகாத்மா காந்தியடிகள் முன்று அல்லது நான்கு முறை இந்த மதுரை வழியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஒரு முறை அவர் இங்கு வந்த போது குடியானவர்கள் (விவசாயிகள் ) அணிந்த ஆடைகளை பார்த்து விட்டு தன்னுடைய ஆடைகளை மாற்றிக்கொண்டார். அறையில் ஒரு கச்சை தோள்பட்டையில் ஒரு துண்டு மட்டுமே அணிந்தார். 1930-ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் பங்கு பெற அவர் இந்த ஆடையையே அணிந்திருந்தார். அதை கண்ட அந்நாட்டு தலைமை அமைச்சர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்திஜியை “அரை நிர்வாண பக்கிரி” என ஏளனம் செய்தார்.

மகாத்மா காந்தி அவர்கள் ஒரு முறை புதுடெல்லியில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கியிருக்கும் பங்கி காலனி என்னும் குடிசைப்பகுதியில் தாங்கினார். அமைச்சர் மற்றும் அரச பிரதிகளும் (வைஸ்ராய்) அங்கு சென்று அவரை சந்தித்தனர். காந்திஜி சிறையில் இருந்த காலங்களில் இவர்கள் (அமைச்சர் மற்றும் அரச பிரதிகளும்) அங்கு சென்று பல தீர்மானங்களை கேட்டு பெற்றனர். ஆள்பவர்கள் ஆளப்படுபவரின் தீர்மானங்களை கேட்டு பெற்றனர் என்ன வேடிக்கை ? இந்தியா என்றால் காந்தி என்று ஆயிற்று.

காந்தியடிகள் பல முறை மதுரை வழியாக பயணம் செய்தாலும் ஒரு முறை கூட மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யவில்லை. ஏனென்றால், அந்த கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டார்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தான் பின்னாளில் இவர் நிர்மாண செயல் திட்டம் வகுக்கும் போது தீண்டாமையை முதல் அம்சமாக வைத்தார்.

1939-ல் இராஜாஜி, வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர்.சுப்பராமன் ஆகியோர் ஆலய பிரவேசத்தை நடத்திவிட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். மூதறிஞர்கள், மதுரை கோவில் வீதிகளிலும் அதனை சுற்றியுள்ள மற்றப்பக்கங்களிலும் அனைவரின் எழுச்சியை தட்டி எழுப்பினர். மக்களின் கருத்துக்கள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அரசு மாதவழிபாடுகளில் தலையிடாது.

ஒரு நாள் அதிகாலையில் வைத்தியநாத ஐயர், சுப்பராமன், டாக்டர். ஜி.ராமசந்திரன், சோமசுந்தர பாரதி, மணக்கால் பட்டாபிராமய்யர், சோழவந்தான் சின்னசாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்ராமைய்யர், கக்கன், சுப்ரமணிய நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட தொண்டர்கள் புடை சூழ மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்து வழிபாடு செய்ய சென்றனர். அங்கு வழிபாடு செய்யும் பிற அர்ச்சகர்கள் அனைவரும் ஆலயத்தில் இருந்து வெளியேறி விட்டனர். அதனால் "சைவ மறைவழி பயிற்சி" பெற்ற பிற அர்ச்சகர்கள் எங்கு இருப்பார்கள் என்று தேடினர். இதனால் பல சிக்கலுக்கு உள்ளாகினர். ஒரு வழியாக சிங்கம்புணரி என்னும் ஊரில் ஒருவர் இருப்பதை அறிந்து அவரை வரவழைக்க ஊர்திகள் அனுப்பினர். ஆனால் அந்த அர்ச்சகர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வரும் வழியில் அவர் இறைவனடி சேரும் நிலை ஏற்பட்டு விட்டது . பின் அவரை அழைத்து அவர் ஊரில் கொண்டு விட்டு விடும் பட்டி கூறிவிட்டனர் . சுப்ரமணிய நாடார் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்.(விடுதலை வேள்வியில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஊர்களில் கமிஷன் கடை நடத்தி தனது சொத்துக்களை இழந்தார்).இவர் அருப்புக்கோட்டையில் சிவன் கோவிலில் வழிபாடு செய்பவரை வரவழைத்து வழிபாடுகள் நிகழ்த்தினார். அவர் இறைவனுக்கு எக்குறையும் நேரா வண்ணம் அனைவருக்கும் விபூதி ,பிரசாதங்களை வழங்கினார். ஆலய வழிபாடு சிறப்பாய் நடந்தது என்று சொன்னால் பின்னல் இருந்து இயக்கியவர் இராஜாஜி தான் என்பது சொல்ல வேண்டியதில்லை. பின் 1945-ல் காந்தியடிகள் மதுரை வந்து மீனாட்சி அம்மனை வழிபாடு செய்தார்.

மதுரை ஆற்று மணலில் மாபெரும் பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காந்தியடிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் வணங்கி விட்டு தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று கூறி சென்றார். ஆலய பிரவேசம் ஜூலை 8, 1939-ல் நடைபெற்றது.

பின்குறிப்பு :

1. இந்த செய்தி திரு.சுப்ரமணிய நாடார்(இராஜாஜி சீடர்) கூற கேட்டது.

2. ஆலய பிரவேசத்தில் முத்துராமலிங்க தேவர் பெருமான் அவர்களின் தொண்டு அளப்பறியது.

3. சங்கரய்யா மற்றும் ஐ.மாயாண்டி பாரதி போன்ற பொதுவுடைமை தோழர்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர்.Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.