புலம் பெயர்தல் IT தமிழன் தொடர் - 1 | Migration IT Thamizhan Series Episode - 1

புலம் பெயர்தல் IT தமிழன் தொடர் - 1 | Migration IT Thamizhan Series Episode - 1

இந்த தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனை. | In This Series All Characters and Events are Imaginary

IT தமிழன்

" னக்கு எது சரின்னு படுதோ அத செய். எனக்காகவும் அம்முக்காகவும் கன்வைன்ஸ் ஆகாத

" எனக் கூறிய என்னவள் தோளில் சாய்ந்திருக்க, மடியில் என் குழந்தை துயில் கொள்ள அந்த விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். தாயகம் திரும்ப வேண்டிய விமானம் இன்னும் 2 மணி நேரத்தில் வந்தடையும் என அந்த பலகை பேசியது.

யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா

பெயரளவில் மட்டுமே யூனிட்டியை கொண்டுள்ள தேசம்.

இந்த தேசத்தின் மீதான மோகம் இந்தியாவிலிருந்து என்னை இங்கு இழுத்து வந்தது. அமெரிக்க மாப்பிள்ளை எனும் ப்ரைஸ் டேக் கோடு என் திருமணம் எனும் சம்பிரதாயமும் நிறைவானது. என் அதிர்ஷ்டம் என் மனைவி அன்பெனும் விலைமதிக்க இயலாத கடனை எனக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். நாங்கள் பூசிய வண்ணத்தில் மெருகேறிய ஓவியமாய் கிருத்திகா எனும் அம்மு உருவானாள். பூந்தோட்டத்திற்கு உவமையாக நான் என் குட்டிக் குடும்பத்தைக் கூறலாம்.


தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மற்றுமொரு அடிமை என்பதை தவிர்த்து என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேறெதுவும் எனது கையில் இல்லை.

இன்று நான் இந்த ஏர்போர்ட்டில்

அமெரிக்கா எனும் கனவு தேசத்தை விட்டு வெறுப்போடு வெளியேற ஒரு கனத்த காரணமுண்டு.

அன்று ...

அலுவலகம் கிளம்பும் என்னுள் பல்வேறு குழப்பங்கள் மனதில் நிம்மதியில்லாத ஓட்டம்.

" ஏங்க நீங்க மனச குழப்பிக்காதீங்க மாமாவுக்கு ஒண்ணும் ஆகாது. நார்மல் சுகர் ப்ராப்ளம் தான். நான் அத்தைக்கு போன் பண்ணி பேசுறேன்" என தமயந்தி கூறினாள்.

" இல்ல மா கடல் கடந்து இருக்கோம். அப்பா அம்மாவை பக்கத்துல இருந்து பாக்க முடியலயேங்ற குற்றவுணர்ச்சி தான் என்னை கொல்லுது" எனக் கூறினேன்.

"எல்லாம் சரி ஆகுங்க" என என் கையை இறுக பற்றினாள்.இதயத்தில் வீற்றிருப்பவர்களின் கைபற்றுதல் ஆத்மார்த்தமான ஒன்று. அதன் இறுக்கமும் சூடும் எப்பேற்பட்ட துன்பப் பனிமலைகளையும் உருக்கிவிடும்.

"சரி நான் கெளம்புறேன். அந்த மேனேஜர் ரிச்சர்ட் எதுனா வாய்க்கு வந்த படி பேசுவான்" என அரக்க பரக்க கிளம்பலானேன்.

தமுவின் குரல் சற்று பக்குவத்தோடு " ஏங்க புது கவர்ன்மென்ட் வந்துருக்கு. ட்ரம்ப்ப பாத்தா ஏடாகூடமா தெரியுது. ரேசிஸ்ட்டா இருப்பாரு போல உங்க மேனேஜர் ரிச்சர்ட் போல. கொஞ்சம் நிதானமா நடந்துக்குங்க." இவ்வாறாக ஒலித்தது.

" தமு..என்ன என்னடி பண்ண சொல்ற ? நம்ம நாட்டுல இருந்தா சாதியால ஒடுக்குறானுங்க. அதனால இங்க ஓடி வந்தா நிறத்தால ஒடுக்குறானுங்க. இந்தியனா பொறக்குறதே பெரிய சாபம் தான். அதையெல்லாம் தாண்டி தான் வாழ்ந்துகாட்டணும்ங்ற வெறி இருக்கு. ஏன்னா நான் மேட் இன் தமிழ்நாடுடி" என அவள் கன்னத்தை இதமாக கிள்ளிவிட்டு விடைபெற்றேன். ப்ளம் கேக்கின் ஒரு மிச்சம் என் கைகளில் ஒட்டியதான உணர்வு.

அப்பாவின் உடல்நிலை குறித்த சிந்தனை தான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அப்பா என்ற ஒருவர் இல்லாவிடில் இங்கு முக்கால்வாசி பேருக்கு வாழ்வே இல்லை. அம்மாவின் அன்பை ப்ரேண்டிங் செய்தவர்கள் அப்பாவின் பாசத்தை ஏனோ கண்டுகொள்ளவில்லை என்பது துயரம்.
வழக்கமாய் அலுவலகத்தில் இருக்கையில் ஊரிலிருந்து அலைபேசி அழைப்பு.
அம்மா அழைத்திருந்தார்.
கைகள் நடுங்கியது
மனம் படபடத்தது.
அச்சத்தோடு அழைப்பை ஏற்றேன்.

" சிவா அப்பா உன்கிட்ட பேசணும்னு சொல்றாருடா" என உடைந்த குரலை அம்மா ஒட்டவைத்துக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா ஆச்சு ? " எனக் கேட்டு முடிப்பதற்குள். அந்த கரடு முரடான குரல் கேட்டது. அந்த கரடுமுரடான குரலில் தான் எத்தனை முரணான இனிமை.

"தம்பி நல்லா இருக்கியாப்பா ? "

" அப்பா. நான் நல்லா இருக்கேன். இப்போ உடம்பு பரவாயில்லையா ? "

" தெரியலடா. உன்னைப் பாக்கணும் போல இருக்கு. என்னவாச்சு ஆகிடுச்சுன்னா அம்மா தனியா ஆகிடுவா. அவள பாத்துக்கப்பா. உன்னால இப்போ இங்க வந்து ஒரு எட்டு தலய காட்டிட்டு போனன்னா கொஞ்ச தேவலாம். நான் ஒரு மடையன் நீ என்ன இங்கிட்டு உசிலம்பட்டிலயா இருக்க வந்து உடனே பாக்க "

"அப்பா, உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. கருப்பன் அவ்வளவு சீக்கிரத்துல நம்மள கைவிட்ர மாட்டான். நீங்க நம்பிக்கையா இருங்க"

" சாவை பத்தி பயம் இல்லப்பா. உன்ன ஒரு கண்ணு பாத்தா போதும். அதுக்குள்ள எனக்கு எதுனா ஆச்சுன்னா...."

"அப்பா நீங்க அப்படியெல்லாம் பேசாதீக"

" இந்த உலகம் மோசமானதுப்பா. வளரவிடாது.சூதானமா பொழச்சிக்க. நீ யார கட்டிருக்கியோ அவள பொறுத்து தான் உன் வாழ்க்கை. என் மருமக உன் வம்சத்தையே காப்பாத்துவா. அவள ஒரு நாளும் கைநீட்டி அடிச்சிடவோ, முகம் சுழிக்குற மாதிரி பேசிரவோ செஞ்சிராத.


கம்ப்யூட்டர் வேல செய்யுறவன்ட இப்படி பேசுறோமேன்னு கஷ்டமா தேன் இருக்கு. இருந்தாலும் சொல்றேன். நமக்கு சோறு போட்ட 10 ஏக்கரா காடு தரிசா கெடக்கு. அத பாக்கையிலயே என் உசுரு கொஞ்ச கொஞ்சமா போகுதுய்யா. என் காலத்துக்கு பொறவு அந்த மண்ணுக்கு உன்னால முடிஞ்சத செய். இது தான்ய்யா இந்த கெழவனோட கடைசி ஆசை"

"அப்பா என்னப்பா அதெல்லாம் இன்னும் காலம் கெடக்கு. நீங்க சும்மா இருக்கிறியளா"

" சரிப்பா. அம்முவ பாக்கணும்னு ஆசையா இருக்குப்பா. சரி நீ வேலய பாருய்யா. நான் அப்புறமா பேசுறேன்.."

தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது நான் அறிந்திருக்கவில்லை தகவல் தொடர்பு இரத்த பந்தத்தையும் துண்டிக்கும் என்று.

" உன்ன ஒரு கண்ணு பாத்தா போதும்" என்பதும்
" அந்த மண்ணுக்கு உன்னால முடிஞ்சத செய் " என்ற அப்பாவின் குரல் அறை முழுக்க நிரம்பி வழிந்தது.

சில மணிநேரங்களில்...............

தொடரும்...........

தொடர்-2யை படிக்க...Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.