பறவையே எங்கு இருக்கிறாய்....

இந்த நாட்கள் நீளாதா:
அன்று கல்லூரியின் இறுதி நாள். கடைசி தேர்வை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த கடைசி தேர்வின் கடைசி விடையின் கடைசி பத்தியை எழுதும் போது இன்னமும் இந்த நாட்கள் நீளாதா என மனம் ஏங்கி ஒவ்வொரு எழுத்தையும் சிரத்தையோடு கடத்தலானேன். 4 வருடங்களும் கண்முன்னே வந்து சென்றன. நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவளை, அவளது துணையை இழந்துக் கொண்டே இருக்கிறோமோ என்ற உணர்வு என்னை தின்றுக் கொண்டிருந்தது. அவளுடனான இந்த நட்பு என்பது அனாதைகள் இல்லத்திற்கு கிடைத்த பெரும் பெற்றோர் கூட்டம் போன்றது.
சிறகில்லா தேவதை அவள்:
அவளது துறையை நோக்கிய என் பயணம் அவளது நினைவுகளோடே தொடர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து படிக்கும் மாணவர்கள் இருப்பதனால் எனக்கும் அவளுக்கும் நட்பினை தமிழே ஆரம்பம் செய்தது. தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா ஆரம்பம் ஆன சில வினாடிகளிலேயே அவள் என் கண்ணில் பட்டாள். அன்று அவள் தான் அந்த நிகழ்வின் கதாநாயகி, கதாநாயகன் எல்லாம். அவள் தேவதையைப் போல இருந்தாள். எங்கே சிறகுகளிலிருந்தால் வான் பறந்து நம்மிடம் வந்துவிடுவாளோ எனும் பயத்தில் கடவுள் அவளுக்கு கால்களை கொடுக்கவில்லை. சிறகில்லா தேவதை எனிலும் அவள் செய்கைகள் எல்லாம் என்னைக் கவர்ந்து கொண்டே இருந்தன. சாமி சிலை தேரில் அமர்ந்து வருவது போன்ற கம்பீரத்தை அவளது சக்கரம் பொருந்திய நாற்காலி தந்தது.
இந்த குப்பையை எங்க போட?
அது கோலப்போட்டி. தன்னுடைய நாற்காலியில் இருந்து கொண்டே கோலத்தினை துவங்கினாள். அவளுடைய அசாத்திய தைரியமே ஒரு காந்தமாய் என்னை அவள் பக்கம் ஈர்த்தது. விழாவின் ஒருங்கிணைப்பாளரானதால் கோலப்போட்டி முடிந்ததும் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு போகுமாறு கூறினேன். பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அவளை பார்த்து "ஏங்க பரவாயில்லை உங்க கோலத்தை நான் கிளீன் பண்ணிக்குறேன் " எனக் கூறினேன். "ஹலோ ஏன் இந்த கருணை, உங்க கருணை தான் ரொம்ப கொடுமையானது " என நறுக்கென்று கூறினாள். நானும் நம் வேலையை பார்ப்போம் என நகர்ந்து கொண்டேன். சக உறுப்பினர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பரபரப்பின் மத்தியில் " இந்த குப்பை எல்லாம் எங்க போட ? " என ஒரு குரல். வந்த எரிச்சலில் " என் தலையில போடும்மா " எனத் திரும்பினேன்.சிறிதும் தாமதிக்காது தன் தோழிகளின் உதவியோடு சுத்தம் செய்த கோலக் குப்பையை என் தலையில் போட எக்கி முயன்றாள் அந்த வீலிங் சேர் வித்தகி. நான் "அட இரும்மா விட்டா கொட்டிருவ போல..ஆளப் பாருங்களேன் " என சிரித்தேன். அந்த பக்கம் போடுங்க எனச் சொல்லிவிட்டு நகர்ந்தேன். "சே இவ்வளவு சுட்டித்தனமான பெண்ணிற்கு கடவுள் இப்படி ஒரு குறையை வைத்துவிட்டானே " என மனதிற்குள் லேசான வருத்தம்.
நட்பில் இருந்து (காதல்)நட்பு வரை:
கல்லூரியெங்கும் நிகழும் போட்டிக்களில் அவள் சக்கரமாய் சுழல்வாள். எங்களுடைய நட்பும் லேசான புன்முறுவலில் துவங்கி பால்ய சிநேகிதம் போல வலுப்பெற்றது. ஒரு நாள் என் நண்பர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன் ஒவ்வொரு பெண்ணையும் விவாதப் பொருளாக்கும் விளங்காமல் போன கூட்டம் என் தோழியின் பக்கமும் வந்தது. " அவளுக்கெல்லாம் இருக்குற திமிருக்கு தான் ஆண்டவன் அவள வீல் சேர்ல உக்கார வச்சிருக்கான் மாப்ள. இப்போ நம்ம குமாரு அவளுக்கு கூடத் தான் சுத்துறான். அதுக்குன்னு அவன் அவள கட்டிருவானா என்ன ? " என்ற அந்தக் கேள்வி எனக்குள் கோபத்தை ஏற்படுத்தினாலும் என்னுடைய இயலாமையையும் சுட்டிக் காட்டியது. கூனிக்குறுகி அவளிடம் இதைக்கூறினேன். அப்போது "விடுடா அவங்களுக்கு அவ்வளவு தான்டா அறிவும் மனசும். எல்லாருக்கும் கடவுள் எல்லாத்தையும் கொடுக்குறதுல்ல, எனக்கு காலை கொடுக்காத கடவுள் அதுக்கும் சேர்த்து மனச கொடுத்துருக்காருன்னு அவங்களுக்கு தெரியல " என அவள் கூறும் போது தைரியத்தின் உச்சத்தில் நின்றுகொண்டிருக்கும் அவளை தலை நிமிர்ந்து அன்னார்ந்து பார்க்க வைத்தாள். " அப்புறம் " டேய் எப்படிடா டேஸ்டே இல்லாம உன்னைப் போய் என்கூட கம்பேர் பண்றாங்க " ன்னு நக்கலடிக்க ஆரம்பித்துவிட்டாள். "அடிங்க" என கையை ஓங்கலானேன். இப்படியாக எங்கள் இருவரையும் ஒரு ஆழமான புரிதல் கட்டிப்போட்டுக் கொண்டது.
அன்பின் அளவுகோல் தான் காதல்:
எங்கள் நட்பு ஆண் பெண் ஈர்ப்பை எல்லாம் கடந்து வெகு நாட்கள் ஆகியது. இப்போது நானும் அவளும் வேறல்ல என்பது போன்றதோர் உணர்வில் உயிர்வாழத் துவங்கி இருந்தோம். முக்கால் வாசி நேரம் என் கைகள் அவளது சக்கர நாற்காலியில் கட்டப்பட்டிருக்கும். அதை ஓர் அன்புக்கட்டளையாய் ஏற்றுக் கொள்வேன். பல தடவை எங்களுக்குள் காதல் குறித்த உரையாடல்கள் வந்த போதிலும் எங்கள் நட்பு அசைந்துக் கொடுக்கவே இல்லை. இங்கு பல ஆழமான நட்புகளை ஆட்டம் காண வைப்பது காதல் தான். ஒரு ஆணும் பெண்ணும் வெறுமனே ஈர்ப்பினால் மட்டுமே சேர்ந்துவிட முடியாது. ஒரு சம மரியாதையை தான் இந்த உயிர்கள் தேடும். அந்த அன்பின் அளவுகோல் ஒன்றே. பெயரிடும் போது காதல் எனச் சொல்லிக் கொள்கிறோம்.தொட்டுப் பேசினாலும் தவறாய் தெரியாது தாய்மை பண்பு மெருகேறி வழியும் எங்கள் நட்பினை நான் காதலெனும் வட்டத்திற்குள் அடைக்க விரும்பவில்லை.
பறவையே இங்கு இருக்கிறாய்:
அவளது தோழிகளிடம் விசாரித்ததில் அவளுக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு சென்றிருப்பதாக கூறினார்கள். புறாக்கள் அன்பினை சொறியும் அழகான சோலை போல எங்கள் கல்லூரி வளாகத்தில் புறாக்கள் குமியும் இடமது. "பறவையே எங்கு இருக்கிறாய்" என்ற பாடல் வரிகளை உயிர்பித்ததை போல அவளை தேடினேன். புறாக் கூட்டத்தினிடையே அவற்றிற்கு உணவினை வீசிக் கொண்டு ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். மாற்றுத் திறனாளி என அவள் தன்னை ஒரு போதும் நினைத்ததில்லை. பார்க்கும் நம் கண்களில் தான் ஊனம். என்னைக் கண்டதும் புறாக்கள் பறக்க தன்னுடைய சக்கர நாற்காலியை சுழற்றிக் கொண்டு என் பக்கம் வந்தாள். தாயினை கண்டு தவழ்ந்து வரும் குழந்தையை போல. இதை விட அழகான ஒரு காட்சியை விவரமறிந்த பின் நான் கண்டதில்லை. அவள் கண்களில் நட்பு என் கண்களில் கண்ணீர். அன்பு எல்லையற்றது. நட்புக்கு பாலினமேது ? அன்று அவள் இட்ட கோலத்தை நினைத்துப் பார்த்தேன் வீலிங் சேரில் புறா ஒன்று கட்டப்பட்டிருந்தது.
"இது WhatsApp தமிழனின் படைப்பு"
Story By:
WhatsApp Thamizha
Comments