ஸ்ரீ கோதை நாச்சியாரின் சீர்மையும் பெருமையும் -2

எப்படி?

பதிவு -3

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறிய முன்னோர்கள் கோவில்கள் அமைத்து கோபுரங்களை கட்டினார்கள். கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் இருக்கும். அதில் வரகு, தானியங்கள் இருக்கும். அவை 12 ஆண்டுகள் கெடாமல் இருக்கும். வான் வெளியில் உண்டாகும் இடி மின்னல்களை தாங்கி பாதுகாக்கும். இதனால் தான் முன்னோர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கூறுவார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் கோபுரம் 192 அடி உயரம் கொண்டது. இது தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது. அதே போல் தஞ்சை பெருவுடையார்கோவிலின் கோபுரமும் 216 அடி உயரம் கொண்டது. கங்கை கொண்ட சோழீச்சுரம் கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் கோபுரத்தின் விமானம் 80 அடி உயரம் கொண்டது. கடைசி மூன்று கோவில்களும் உலக வரைபடத்தில் தனித்தன்மை வாய்ந்த பழம்பெரும் சின்னங்களாக குறிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பாடலீஸ்வரர் கோவில் என்று சொல்லி 1960-ல் ஒரு பெரிய இயக்கமே நடைபெற்றது எனலாம். அதற்கு அவர்கள் கூறும் காரணங்களை என்னவென்றால் ,

1. கோபுரத்தின் வெளியில் எந்த மத சின்னமும் இல்லை.

2. கோபுரத்தின் உச்சியில் பக்கவாட்டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் காலபைரவர் காலைத்தூக்கி நர்த்தனம் ஆடும் விதமாக உருவங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.

3. கோபுரத்தின் நுழைவு வாயிலின் முதல் மாடியில் சங்கு சக்கரம் நாமம் போட்டு கல்லில் செதுக்கி இருந்தனர்.

4. வடபத்ரசாயி (ஆலிலையில் துயில் கொண்ட அண்ணல். வடம் - ஆலமரம், பத்திரம் – இலை, சயனம் - துயில்) கோவிலில் கர்ப்பகிரகத்தின் முன்வாயில் மறைத்து சுண்ணாம்பினால் ஆன உருவத்தில் வடபத்ரசாயி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. ஸ்ரீ ஆண்டாள் கோவில் மூலஸ்தானத்தில் ரெங்கநாதர் உருவம் வழிபடப்படுகிறது. இங்கு ஒன்று தேவையா? என்று கூறப்படுகிறது. அப்படியானால் கல்லிலோ அல்லது உலோகத்திலோ வடித்திருக்கலாம் அல்லவா?

6. ஒரு வினோதம் என்னவென்றால், மூலஸ்தானம் தனியாக ஒதுங்கி உள்ளது. மூலஸ்தான அறையில் ஒரு கற்கிராதி நான்கு கண்களுடன் தென் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. (அது ஒரு வண்டு உள்ளே வந்து வெளியே செல்லும் அளவுக்கு அமைந்துள்ளது).

7. கோவிலில் குடி கொண்ட தெய்வம் பாடலீஸ்வரர் - செண்பகவல்லியம்மன் என்பர். இவ்வூருக்கு மேற்கே உள்ள செண்பகத்தோப்பு இக்கோவிலுக்கு சொந்தமானது.

8. இக்கோவிலுக்கு மேற்கில் உள்ள சாலியன் தோப்பு (பனைமரங்கள்) சுமார் 400 ஏக்கரும் கோவிலுக்கு சொந்தமானதாகும். அதை நெசவாளர்களுக்கு நிபந்தமாக விட்டு அதற்கு பதிலாக தேருக்கு பரிவட்டம், கோவிலுக்கு துணி வகைகளை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தோப்பனாது பனை ஏறும் தொழிலாளர்கள் வசம் உள்ளது.

9. இக்கோவிலின் தேர் முதலில் பாண்டிய மன்னரால் வழங்கப்பட்டு அது பிரிக்கப்பட்டு இப்பொழுது உள்ள பெரிய தேர் வானமா மலை ஜுயரால் செய்ததாக சொல்லப்படுகிறது.

10. ஊருக்கு வடக்கு பக்கம் திருவண்ணாமலை கோவிலில் ஒரு தெப்பம் உள்ளது. அந்த கோவிலின் உற்ற தெய்வம் குகன் (முருகன்) என்பர் முன்னோர்.

11. இந்த கோவிலின் பெரிய கோபுரம் ஆண்டாள் சன்னிதி முன்பாகவோ, கோவிலின் அல்லது உள்வாயிலின் முன்பாகவோ அமைக்கப்படவில்லை.

இந்த செய்திகள் எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரியோர்கள் கூறியது. இதைப்பதிவிடும் நபர் 90-வது அகவையை எட்டும் படியில் உள்ளார். கல்வெட்டுச் சான்றுகள், பட்டயம் , செப்பேடுகள் போன்றவை கொண்டு நிறுவப்பட வேண்டும்.

இந்த பதிவு யாரையும் புண் படுத்தும் நோக்கம் அல்ல. - With malice towards none and charity for all.

வால்பகுதி:

வடநாட்டில் இந்து ஆலயங்களின் மேற்பகுதி உடைக்கப்பட்டு முகலாயர்கள் ஆட்சியில் மசூதிகள் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. "தொப்பியை போடுகிறாயா இல்லை கத்தியால் வெட்டவா" என்று முஸ்லீம் மதம் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு வால் பையன் விபூதி பூசுவதை விட்டுவிட்டு சட்டையை கழட்டி நாமம் போடா போகிறேன் என்றானே பார்க்கலாம் எப்படி?

பதிவு-4

வட நாட்டில் மீரா என்ற பக்தை பரமன் மீது பக்தி பனுவல் பாடி மோட்சம் பெற்றார். அதுபோல் நம் தமிழகத்தில் ஸ்ரீ ஆண்டாள் உத்தமன் மீது பக்தி பாடல் பாடி பரமன் பாதம் சேர்ந்தாள். சிலர் நடக்குமா? அடுக்குமா? என்பர். ஞானிகளுக்கும், இறை ஞானம் பெற்றவர்களுக்கும் எல்லாம் சாத்தியமாகும். கீதையில் சில கருத்துக்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், பக்தி கொண்டு யோக நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி பயிற்சி செய்தால் எல்லாம் எளிதாகும். "Man rises to god head through tapas"

மகாகவி காளிதாஸ் மா காளியின் அருள் பெற்று மாபெரும் கவியானான். முருகன் அருள் கிடைக்கப்பெற்று அருணகிரி பெருமான் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி முதலிய பாடல்களைப் பாடினார் என்பர். வில்லிபுத்தூராரை மடக்கு கவி பாடி தோற்க்கடித்தார். கம்பரும் சரஸ்வதி தேவியின் அருள் சக்தி பெற்று மாபெரும் காவியமான இராமாயணத்தை தமிழில் யாத்தார். காலடியில் பிறந்த சங்கரர் அம்பாள் அருள் பெற்று வடநாடுகள் அனைத்திற்கும் சென்று மடங்களை நிறுவி வித்தகர்களை வென்றார் என்பர். காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் சங்கரரின் அருள் கொடை ஆகும். ஏழை மூதாட்டிக்கு பொன்மாரி பெய்து நெல்லிக்கனிகள் அளித்தார் என்பர். இறைஞானம் பெற்றவர்களுக்கு எல்லாம் ஒரு பொருட்டல்ல.

தத்துவ வித்தகர் டாக்டர். ராதா கிருஷ்ணன் கூறுவது என்னவென்றால், காளிதாசன் இல்லாவிட்டால் சாகுந்தலம் நாடகம், ஷேக்ஸ்பியர் இல்லாவிட்டால் ஹாம்லெட் பிறந்திராது என்பார்கள். அது போல், ஸ்ரீ ஆண்டாள் இல்லையானால் திருப்பாசுரங்கள் நமக்கு கிடைத்திராது என்பர். திருப்பாசுரங்கள் மறைகளின் சாரம் ஆகும். இப்பாசுரங்களை வேறு மொழிகள் உள்ள நாடுகளிலும் பல்வேறு விழாக்களிலும் இசைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. "Who is not a seer cannot produce great literature". ஞானிகளையும் பெரும் புலவர்களையும் கொச்சைப்படுத்தக்கூடாது.

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது ஐதீகம். ஆகையால், பிறந்த நட்சத்திரத்தை வைத்து ஆடிப்பூர திருநாள் 8 நாட்கள் நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் திருவிழாவில் 7 சப்பரங்களில் பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார், சுந்தரராச பெருமாள், ஸ்ரீனிவாசருமாள், பெரியபெருமாள், திருத்தங்கள் திருநின்ற பெருமாள் ஆகிய தெய்வங்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து வருவது கண்கொள்ளா காட்சியாகும். 9-ம் நாள் ஆடிப்பூரம் அன்று திருத்தேர் வலம் வரும். அந்த தேரில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருள்வார்கள். திருவிழா காலங்களில் அக்கம் பக்கத்தில் உள்ள சிற்றூர்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து சிறப்பு செய்வர்.

இந்த திருத்தேர் 112அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது. மேலும் இது நம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராகும். இந்த தேர் முன்பு 9 சக்கரங்களும், 9 வடங்களும் உடையது. இதில் உள்ள ஒரு வடத்தை தூக்க 50 ஆட்கள் தேவை. இந்த தேரின் பின்பக்கம் நெம்பு தடி கொண்டு தேர் நகர்த்தப்படும். முன்பு இந்த தேர் ஒரு ரத வீதியை சுற்றி வர ஒரு மாதம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். தேரை இழுப்பதற்கு நகரினுள் இருந்து ஆட்களை திரட்டி அழைத்து வருவர். இந்த தேரை காண்பதற்கு காண கண்கோடி கண்கள் வேண்டும். ஆனால் தற்பொழுது வெளியிலுள்ள மரசக்கரங்கள் நான்கும் அகற்றி விட்டு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு, உந்தி தள்ளும் இயந்திரங்களை கொண்டு தள்ளி இந்த திருவிழா ஒரு சில மணி நேரங்களில் முடிவடைகிறது. இவ்வூர் கோபுரம் எவ்வளவு சிறப்போ அது போலவே இந்த ஊரின் தேரும் சிறப்பு வாய்ந்ததாகும்.

வால் பகுதி:

ஒருவனை விரைந்து வர சொல்லியும் மெதுவாக நடந்து வருவதை பார்த்த வால் பையன் என்ன தேர் அசைகின்ற மாதிரி அசைந்து வருகிறாய்? நீ என்ன செக்கா அல்லது தேரா என்றானே பார்க்கலாம் எப்படி? (மரமா அல்லது கல்லா).

-->Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.