வாலியும் இளையராஜாவும்:

பாரதியார், பாரதிதாசன் பாடல்களை பழைய திரைப்படங்களில் பயன்படுத்தி இருந்தாலும், சங்க இலக்கிய பயன்பாடு பற்றிய பெரிய கவனிப்பு எனக்கு இருந்ததில்லை.

90-களில் “குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில்” என தேவாரத்தை புகுத்தி வாலியும், இளையராஜாவும் செய்த மேஜிக் பட்டிதொட்டிகளில் ஹிட் அடித்தபோது பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரிட்சையில் “ராக்கம்மா கையத்தட்டு” னு எழுதிட்டு வராததே ஆச்சரியம். அந்த அளவுக்கு மனனம்.

சங்கத்தமிழ் புகுத்தி செய்த மாயம் :

ஆனால் இப்போவும் 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' பாடல் தகிடு தத்தம். ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பேரலையில் இளையராஜா அலை சற்று ஓய்ந்திருந்த தருணம். கிராமியத்து வரிகளில் ஜொலித்து கொண்டிருந்த வைரமுத்து, ரஹ்மானோடு கைகோர்த்துக்கொண்டு செய்த மாயங்களில் சங்கத்தமிழ் புகுத்தி செய்த மாயமும் ஏராளம்.

வாலியும் ரகுமானும்:

”நறுமுகையே நறுமுகையே” என்று ‘இருவர்' ல் “யாயும் யாயும் யாராகியரோ” “செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்”னு குறுந்தொகை வரியையும், “அற்றை திங்கள் அந்நிலவில்”- புறநானூற்று வரியையும் பயன்படுத்திருப்பார்."நீரும் செம்புலசேரும் கலந்தது போலே கலந்திட வா" என்று வாலி'

”முன்பே வா அன்பே வா” வில் தலைவி தலைவனுக்காக உருகியிருப்பார்.

"அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போவாய் நீயும் வஸ்தாவா" வென 'எனக்கு 20 உனக்கு 18' ல் பா.விஜயும், "அன்றில் பறவை ரெட்டை பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி" என 'ஜீன்ஸ்' ல் வைரமுத்துவும்,"பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்,உன் புன்னகையோ மௌவல், மௌவல் " னு 'சிவாஜி' ல் வைரமுத்துவும் சங்க இலக்கிய வார்த்தைகளை பரவலாக்கி காதலில் கலந்திருப்பதை காணலாம்.

வைரமுத்துவும் சங்க இலக்கியமும் :

"இந்திரையோ இவள் சுந்தரியோ, தெய்வ ரம்பையோ, மோகினியோ "-இது 'காதலன்' படத்தில் திரிகூடராசப்ப கவிராயர் வரிகள் 'குற்றால குறவஞ்சி'யில இருந்து. "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது " - குறுந்தொகை வரிகள் தலைவனை பிரிந்த தலைவி பசலை நோய் வந்ததாக சொல்லும் பாடல், “தீண்டாய் மெய் தீண்டாய் “ பாடலில் வைரமுத்துவின் வைர வரிகளில் . "இடம்கொண்டு விம்மி இணை கொண்டு விம்மி ,இளகி முத்துமடல் கொண்ட கொங்கை " -அபிராமி அந்தாதி யில் இருந்தும், "மாசறு பொன்னே வருக" -சிலப்பதிகாரத்தில் இருந்து வாலியின் வரிகளில்... "பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும் " என்று' தாரை தப்படை'யில் திருவாசக வரிகளில் சமீபத்தில் நம்மை இளகி உருக வைத்தவர் ராஜா.

"மார்கழித்திங்கள் அல்லவா, மதி கொஞ்சும் நாள் அல்லவா", "சூடி தந்த சுடர் கொடியே", "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து... ,கனா கண்டேன் தோழி"," மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத" இதெல்லாம் 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த '#நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள்'. கண்ணதாசன் காலத்து பாடல்கள் '#முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தியவனிருக்கும் வண்ணம் கேட்டாள் 'தேவாரத்தில் ஆரம்பித்து பாரதியார் பாரதிதாசன் வரிகளை எல்லாம் தொகுக்க ஆரம்பித்தால் இக்கட்டுரை முடியாது.

2000-களில் சங்க இலக்கிய பாடல்கள்:

சமீப "அவளும் நானும் அலையும் கடலும்" பாரதிதாசன் வரிகளை ' அச்சம் என்பது மடமையடா'வில் ரசித்து முடிக்கும் முன்பே, ரஹ்மான் அசத்தியிருக்கும் "காற்று வெளியிடை படத்தில் "நல்லை அல்லை" வரிக்கு என்ன அர்த்தம் என்று தேட தொடங்கி கிடைத்த குறுந்தொகை பாடல்" கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே". தலைவன் வருகையை ஊரார் அறிந்து கொள்ள ஏதுவாக ஏன் இவ்வளவு எரிக்கிறாய்? என நிலவை பார்த்து தலைவி ஊடல் கொள்ளுவது.

நல்லை அல்லை = நன்மை தருவதாய் இல்லை" .

சுருக்கமா நம்ம மொழியில சொல்லனும்னா காதலன் காதலியைப்பார்த்து' “என்னை இவ்வளவு சுத்தல்ல விடறியே இதெல்லாம் நல்லா இல்ல ஆமா” னு சொல்றது.

நயமும் சூட்சுமமும்:

இத்தனை நயமும் சூட்சுமமும் உட்பொருளும் கொண்ட சங்க வரிகளை ரசிப்பதுதான் எத்தனை இனிமை..!! திரும்பத்திரும்ப கேட்க தூண்டும் கவர்ச்சியை பாடல்களுக்கு தரும் வல்லமை அச்சொற்களுக்கு உண்டு...!!!

இன்னும்,இன்னும் அதிகமான இலக்கிய வரிகளை பயன்படுத்தி பாடல்களை கவிஞர்கள் தந்தால் மேலும் ரசிக்கலாம்.

நன்றி -லலிதப்பிரியா பிரபாகரன்