காவல் தெய்வம் சுடலை மாடன் சுவாமி சக்தியை பற்றி

இந்த உலகம் நல்லது கெட்டதுகளுக்கு இடையில் ஜீவித்துக் கிடக்கிறது. ஒருவருக்கு நியாயம் எனப்படுவது இன்னொருவருக்கு அதர்மம் என தோன்றும். அப்படி நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்டு மிருகத்தனமாக தவறு இழைக்கும் மனித பிறவிகளுக்கு, அவர்களின் இயல்பு படியே தண்டனையை பாரபட்சமின்றி வழங்கிய ஒரு காவல் தெய்வத்தின் கதை.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் வினாயகர், முருகர் என்று இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்ப அமைப்பை தான் வைதீக மத குறிப்புகள் நமக்கு சொல்கின்றன. ஆனால் கிராமபுறங்களில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் மூன்றாவது ஒரு குழந்தை உண்டு. ரத்தமும் சதையுமாக, ரணங்களின் நடுவே, உலகம் எதை அசுத்தம் என்கிறதோ, அவற்றில் புனிதத்தை காணும் சாமானியர்களின் வழிகாட்டி. வேத புராணங்களை கடந்து மனித மனசாட்சிக்கே முதலிடம் என வரையறுத்து சொன்ன முப்பாட்டன். தீயவரை தீர்த்து கட்டும் சிவ குழந்தை. தீரா வெறியோடு அலையும் ஆத்மாக்களை அடக்கி ஆளும் சுடுகாட்டு தலைவன். மொத்தத்தில் “ தீரா தீரா வாள் வீசும் கரிகாலா “ என தென் மாவட்ட மக்கள் பாடும் KGF BGM க்கு சொந்தக்காரர், சுடுகாட்டை கட்டி ஆளும் சிவ சுடலை ஆண்டவர். இவருக்கு பல கதைகள் உண்டு. அதில் ஒரு கதை தான் இது. siva-parvathi-image

பார்வதி தேவியின் சோதனை செயல் :

பெற்றது இரு குழந்தைகள் எனினும் ஒன்று அரசமரத்தடிக்கு சென்றது, இன்னொன்று பழனி மலையில் நின்றது என பார்வதியார் சோகமாக இருந்த கால கட்டம் அது. அப்போது என்றும் போல சிவபெருமான் உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படி அளக்க சென்று விட்டார். தனிமை என்பது கொடியது. அந்த தனிமையில் இருந்த பார்வதி தேவி “ இவர் எப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் படி அளக்க முடியும். அதை நாம் சோதித்து பார்த்து விட வேணும் “ என்று எண்ணினார். அங்ஙனம் எண்ணிய பார்வதி தேவி ஒரு எறும்பை எடுத்து சிமிழில் அடைத்தார். படி அளந்து விட்டு வந்த சிவபெருமானிடம்

“ ஐயனே தாங்கள் எல்லா உயிர்களுக்கும் படி அளந்து விட்டீர்களா ? “ என்று கேட்க

“உலகத்தில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படி அளந்து விட்டேன்” என்றார்.

“ உங்களுடைய படி அளந்த விதம் காண யாம் இங்கு ஒரு உயிரை அடைத்து வைத்தோம்.அது இப்போது பசியில் உயிர் விட்டிருக்க கூடும்” என பார்வதி தேவி சிமிழை திறக்க அதில் எறும்பு, ஒரு திணை அரிசியை தின்று கொண்டு அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது. அதை கண்ட பார்வதி தேவியோ “ உங்கள் சக்தியை காணவே இந்த தவறை செய்தேன், கொஞ்சி விளையாட குழந்தை இல்லாத காரணத்தால், தாய் மனம் பித்தாகி இதை செய்தோம் “ என பார்வதி சொல்ல.

சுடலை மாடர் தோற்றம் :

“ கயிலாயத்தில் முப்பத்தி இரண்டாவது தூணில் இருக்கும் தூண்டா மணி விளக்கில் முந்தானை ஏந்தி நில். உமக்கு ஒரு குழந்தை கிட்டும்” என சிவனார் வரம் அளிக்க. ஏந்திய முந்தானையில் சிவனாரால் தூண்டப்பட்ட மணி விளக்கில் இருந்து மூன்று சொட்டு சுடர் விழுந்தது. விழுந்த சுடரில் இருந்து அம்மி குழவி போல உருவம் இல்லாத முண்டம் ஒன்று குழந்தையாய் பிறந்தது. பிறந்த குழந்தை சக்தியின் வேண்டுதலால் சிவனார் உருவம் கொடுக்க அழகிய குழந்தை ஆகிட்டு.

சிவனார் ஒரு முறை கண் அசைத்தாலும், அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. அங்ஙனம் அழகே வடிவாய் பிறந்த குழந்தை சுடலை எனும் பெயரோடு கயிலாயத்தில் சிவ குழந்தையாக வளர்ந்து வந்தது. பார்வதி தேவி அமுதூட்டி பாசத்தோடு வளர்த்து வந்தாலும் , பசி தாங்காத சுடலை தொட்டிலில் இருந்து தவழ்ந்து சென்று சுடுகாட்டில் எரியும் பிணங்களை உணவாக்கி, அலையும் பேய்களோடு விளையாடி விருந்து உண்டு, பின் கயிலாயம் வந்து தொட்டிலில் துயில் கொண்டார். குழந்தையை தொட்டிலில் இருந்து எடுத்து கொஞ்சிய பார்வதி தேவிக்கோ அதிர்ச்சி. குழந்தையின் மீது ரத்த வாடை அடித்தது. குழந்தையை கொண்டு போய் சிவனாரிடம் முறையிட, சிவனோ சுத்த சைவமான கைலாயத்திற்கு இவன் ஆக மாட்டான். இவனை பூலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்றார். அதற்கு சுடலை “ நான் அங்கு போனால் என்னை யார் மதிப்பார். யார் உணவளிப்பார். நான் எங்கு செல்வேன் ” எனக் கேட்டார். sudalai-madan-samy

பூலோகம் வரும் சுடலை:

சுடலையின் பிறப்பின் காரணத்தை விவரித்தார் சிவபெருமான். சுடலை சுடுகாடுகளை கட்டி காக்கும் கடவுள் எனவும், அவருக்கு இடுகாட்டில் எரியும் சிதையில் இருந்து உணவு கிடைக்கும் எனவும், மக்கள் ஊட்டு படையல் போட்டு பூசை கொடுப்பார்கள் என சிவபெருமான் சொல்ல, அந்த ஊட்டு படையல் எப்படி இருக்கும் என்று சுடலை கேட்க

கயிலையின் வாசலிலே தேவதைகள் அதிர்ச்சியில் உறைய, சிவனாரே ஆடு, கோழி என ரத்த பலி கொடுத்து சுடலைக்கு ஊட்டு படையல் இட்டு பூலோகம் அனுப்பினார். பேய்களை விரட்டி நல்லவர்களுக்கு வாரி கொடுத்து வாழவைக்கவும், கெட்டவர்களை கருவறுக்கவும் வரம் கொடுத்து அனுப்பினார் கயிலை ஈசன். வாழ்வில் சில ரகசியங்கள் அறிய வேண்டும் எனில் பயணப்படுதல் தான் வழி. அவ்வாறு Wanderlust ஆக இந்திய தேசம் முழுக்க பயணப்பட்டார் சுடலை. இமயமலையில் இருந்து ஆரம்பித்த அவர் பயணம், காசி ஹரித்வாரம் வழியாக திருவேங்கடமலை வந்து தமிழ் தேசம் வந்தடைந்தார் சுடலை.

திருஆலயங்கள் தரிசனம் :

தொண்டை மண்டலம் காஞ்சி கோவில், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் என 1008 சிவாலயங்களையும் 108 திருப்பதிகளையும் சுற்றி வந்து சேர்ந்த இடம், அப்போதைய கேரளமான கன்னியாகுமரி. அங்கு மலையாள பகவதி கோவில் தேரோட்டம் நடப்பதை காண்கிறார் சுடலை. தேரின் கொடி சிங்க கொடியாய் இருப்பதை கண்டு “ இது நம் தாயின் கோடி ஆச்சே, என குழந்தை போல தேர் மீது குதிக்கிறார். மேலும் கோவிலின் உள்ளே சென்று ஆதாழி (ஒரு வகை சேட்டை ) செய்கிறார் சுடலை. தன் கோவில் கோபுரங்கள் இடிபடுவதை கண்ட பகவதி வாளோடு கோவிலுக்குள் வந்து தேடுகிறாள்.

“ யாரடா அது என் ஆலயத்தில் வந்து அக்கிரமம் செய்வது ? “ என பகவதி ஆங்கார ரூபமாய் நிற்க,

அந்த கோபத்தை குறைக்க சுடலை சிறுவனாக மாறுகிறார். சிறுவனை பார்த்ததும் கருணை கொண்ட பகவதி “ யாரப்பா நீ ? “ என்று கேட்கிறாள்.

வீட்டுக்கு ஆகாது என்று சிவனார் விரட்டி விட்ட குழந்தை எனவும். பார்வதியின் மகன் என்றும் தனக்கு இங்கு யாருமே துணையில்லை என்றும், வீட்டுக்கு அடங்கி நல்ல பிள்ளையாய் வளர்ந்திருக்கலாம், சுடுகாடு சென்று பிணங்களை தின்றதால் இந்த நிலை என சுடலை பகவதியிடம் தன் கதையை கூற

மலையாளத்தில் “ ஒரு கணம் சோதிச்சால் ஒரு குடம் நிறையே நல்குந்தோர் அம்மை அல்லே “ என பகவதியை சொல்வார்கள்.

அதாவது ஒரு நொடி பொழுது பகவதி தாயிடம் வேண்டினால், ஒரு குடம் நிறைய வேண்டியவற்றை தந்தருளும் தேவியானவள் பகவதி. “ எனக்கும் இப்படி ஒரு ஆள் தேவை தான் “ என்று தன் கோவிலில் பாதுகாக்கப்படும் 7 அண்டா திரவியங்களை ( தங்கம் முதலான சொத்துக்கள் ) காத்து காவல் தெய்வமாக சுடலையை பகவதி தன் குழந்தையை போல ஏற்றுக் கொண்டாள்.

சிவ பூஜை மேற்கொள்ளப்படும் ஆலயம் ஆவதால் சுடலைக்கு சைவ பூஜை பத்தவில்லை. பகவதி எத்தனையோ முறை சொல்லியும் சிவனின் வரம் கொண்டு கோவிலுக்கு வரும் கெட்டவர்களை கொன்று தனக்கு இரை ஆக்கினார் சுடலை. ஆகையால் சுடலையின் விருப்பபடி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சுடலையானவர் சுடுகாட்டுக்கு சென்று எரியும் சிதையில் உணவுண்டார். இப்படியாக பகவதி கோவிலில் காவல் தெய்வமாக சுடலை வாழ்ந்து வருகிறார்.

மலையாள மந்திரவாதிகள் :

கதையில் ஹீரோ என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார். வில்லனுக்கு அழகான மகள் கண்டிப்பாக இருப்பாள். ஹீரோக்கள் பெரும்பாலும் கரண்ட் பாக்ஸில் கைவைப்பது போல வில்லனின் மகள்களிடம் மோதலுக்கு சென்று அது காதலாக மாறும். அது போல இங்கும் ஒரு மோதல் உண்டானது. ஆனால் அந்த மோதல் காதல் ஆகாமல் கொலையாய் முடிந்தது.

மலையாள நாட்டில் நந்தன் புனலூர் எனும் ஊரில் 1008 புலையன்மார்கள் வாழ்ந்து வந்தார்கள். Black Magic என்று உலகமே மிரளும் மந்திரவாத கலையில் Phd முடித்தவர்கள் இவர்கள். அவெஞ்சர்ஸ் படத்தில் Dr. Strange என்று ஒரு கதாபாத்திரம் மந்திர வித்தைகள் செய்து உலகை காப்பது போல காட்டுவார்கள். ஆனால் பிரபஞ்சத்தை அழிக்க வந்த தானோஸ் எனும் வில்லனின் கையில் அந்த வித்தைகள் மாட்டினால் என்ன ஆகும். அது போல தான் புலையன்மார்கள் மந்திர சக்தியை வைத்து மகாபாவங்கள் செய்து வருகிறார்கள். அவர்களின் தலைவன் காளிபுலையன். காளிபுலையனுக்கு காளிபுலைச்சி என ஒரு மனைவியும், மாவிசக்கி எனும் மகளும் உண்டு. குலதெய்வ இசக்கியின் அருளில் பிறந்த குழந்தை என்பதால் மாவிசக்கி என்று பெயரிட்டனர். மாவிசக்கி இன்று மலையாள படங்களில் வரும் கதாநாயகிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் அழகு. அந்த அழகினை அலங்கரிக்க ஜோஸ் ஆலுகாசில் நகை வாங்கினால் செலவு ஆகுமோ என்று நினைத்த காளிபுலையன், அப்போதைய GST யை நினைத்து மிரண்டிருக்க கூடும். தன் கையில் உள்ள மந்திர வித்தையினால் மை போட்டு பார்த்து, பகவதி அம்மன் கோவிலில் இருக்கும் திரவியங்களையும், அதை காக்கும் சுடலையையும் கண்டான். செவ்வாய் , வெள்ளி சுடலை சுடுகாட்டுக்கு வேட்டைக்கு போகும் நேரம் பார்த்து ஒரு அண்டா திரவியத்தை களவு செய்து கொண்டு போனான்.

வேட்டை சென்று திரும்பிய சுடலை திரவியம் களவாடப்பட்டது அறிந்து பகவதியிடம் முறையிட்டார்.

மலையாள தேசம் செல்லும் சுடலை :

“ மோனே சுடலை, திரவியம் போனால் போகட்டும். கொண்டு போனது யாரென்று கேட்காதே. அவர்கள் பொல்லாத மந்திரவாதிகள். உன்னை பிடித்து அடைத்து வைத்து விடுவார்கள் “ என்று பகவதி, தாய் ஸ்தானத்தில் இருந்து கூற

சுடலை தன் சுயரூபம் வெளிப்பட,வேட்டை ஆடி வெறி தீர்க்கும் நிலை கொண்டார். இனிமேலும் இவனை அடக்க முடியாது என்று “காளிபுலையனை வென்று வா மகனே“ என்று பகவதி ஆசி கொடுக்க, மலையாள தேசம் புறப்பட்டார் சுடலையாண்டி.

நந்தன் புனலூர் வந்த சுடலை மந்திரவாதிகளை வெல்ல வீரம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும் என மாறுவேடங்கள் பூண்டு பல வித்தைகளை செய்து புலையன்களின் கவனம் ஈர்த்த பிறகும், காளிபுலையனின் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. கிழவன் வேடம் பூண்டு, பார்க்கவே வெறுக்க தக்க வேடத்தில் புலையன் வீட்டில் பிச்சை கேட்க, சில அழகான பெண்களுக்கே உண்டான அகங்காரத்தில் மாவிசக்கி சுடலையை இழிவுபடுத்த, திமிர் பட வில்லியாய் சுடலையின் கண்களுக்கு மாவிசக்கி தென்பட்டாள். அழகினால் ஏற்பட்ட மமதையில் தன்னை இழிவுபடுத்திய மாவிசக்கியை பழிவாங்கவும், அவளது அப்பனின் குடியை கருவறுக்கவும் சபதம் இட்டார் சுடலையான மாயாண்டி.

காளிபுலையனை வதம் செய்த சுடலை :

தன் வீட்டுக்கே வந்து கறுவறுப்பேன் என்று சொன்ன சுடலை யார் என்று மை இட்டு பார்த்தான் புலையன். சுடலையின் காவல் தெய்வ நிலையும், திரவியம் களவாடபட்டதால் ரத்த வெறி கொண்டு அலையும் சுடலையை கண்டு பயந்து காவல்களை அதிகம் செய்தான். சபதம் இட்ட எட்டாம் நாள் இரவில் எறும்பாய் புலையனின் கோட்டை புகுந்த சுடலை தன்னை இழிவுபடுத்திய மாவிசக்கியை கவர்ந்து தன் பழி தீர்க்கும் படலத்தை ஆரம்பித்தார். புலையனின் பங்காளிகள் காகாச்சி மலையின் கண்ணாடி சோலையில் விவசாயம் செய்து வருவது தெரிந்து அங்கு மத யானையாய் மாறி ஒட்டு மொத்த விளைநிலங்களையும் சூறை ஆடினார். மையிட்டு பார்த்த புலையன் தன மகளை கவர்ந்தது, விளைநிலங்களை அழித்தது, தன்னை கொல்ல காத்திருப்பது எல்லாமே சுடலை என்பது தெரிய வந்து, சுடலையை கட்டுக்குள் கொண்டு வர தன் மகளையே பலி கொடுக்க துணிந்தான் புலையன். பழி வாங்க வந்த சுடலை அந்த பலியை ஏற்று புலையனின் கட்டுக்குள் சென்றார். காஞ்சனா பேயை கட்டுக்குள் வைத்தது போல சிமிழில் சுடலையை அடைத்து, குளத்திற்குள் புதைத்தான் புலையன். காளிபுலைச்சி குளத்தில் தண்ணீர் எடுக்க, சிமிழ் குடத்திற்குள் போனது. வீட்டுக்கு வந்ததும் வெளிப்பட்ட சுடலை, புலையனை சம்ஹாரம் செய்தார். புலையனின் குடி அழித்து திரவியங்களோடு பகவதி ஆலயம் வந்து சேர்ந்தார். பகவதியின் ஆசி பெற்று மறுபடியும் தன்னுடைய பயணத்தை துவங்கினார். sudalai-madan-samy-tamilnadu

தெய்வ நிலை கொண்ட சுடலை :

பாரத தேசம் முழுக்க பயணப்பட்ட சுடலை ஆண்டவர் திருநெல்வேலி சீமையில் சீவலபேரி எனும் இடத்தில தெய்வ நிலை கொண்டார். அதன் பின் அந்த கோவிலின் பிடி மண் எடுத்து வள்ளியூரில் ஒத்த பனை சுடலையாகவும் இன்னும் தென் திசையில் பல்வேறு ஊர்களை காக்கும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார் சுடலை மாடன்.

பின் காலத்தில் பண்ணையாரால் கோவிலின் அருகில் சாட்சிகள் இன்றி கொல்லப்பட்ட தொழிலாளியின் கொலைக்கு நீதிமன்றம் வந்து சாட்சி சொல்லி தர்மம் காத்ததால் ஹைகோர்ட் மகாராஜா எனவும் பல சாமானிய மக்களை அல்லல்களில் இருந்து காத்து வரும் கண் கண்ட தெய்வமாக இருக்கிறார் சுடலை.

உலகத்தில் நல்லது செய்ய ஆயிரம் வழி இருக்கையில், கெட்ட வித்தைகள் கற்று மாந்த்ரீகத்தை மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்திய புலையன்களை அழிக்க சிவ அவதாரமாக தோன்றியவரே சுடலை. சுடலை அளித்த தண்டனைகள் அனைத்தும் கர்மாவின் வெளிப்பாடு.

சுடலை ஆண்டவர் சொல்வது எல்லாம் ஒன்று தான்

KARMA IS A BOOMERANG …

கதைகள் தொடரும்

வாட்சப் தமிழா விவேக்